ஆவணங்களை அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க முடியாது : சி.விஜயபாஸ்கர் வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை திட்டவட்டம்

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் தங்களிடம் உள்ள அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்க முடியாது என லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2016 – 2021 -ம் ஆண்டு காலகட்டத்தில் அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்தவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த சி.விஜயபாஸ்கர். அவர் தனது பதவிக்காலத்தின் போது 35.79 கோடி ரூபாய் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு புதுக்கோட்டையில் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை கைப்பற்றிய ஆவணங்களை தங்களிடம் வழங்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. மேலும், இந்த வழக்கில் தன் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் அனுமதி பெறப்படவில்லை என சி.விஜயபாஸ்கர் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தபோது மனைவி ரம்யாவுடன் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆஜராகி இருந்தார்.

அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தங்கள் வசம் உள்ள அனைத்து ஆவணங்களையும் அமலாக்கத் துறையிடம் வழங்க முடியாது என தெரிவித்தார். மேலும் முக்கியமான ஆவண நகல்கள் தேவை எனில், அதனை குறிப்பெடுத்துக் கொடுக்க தயாராக உள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.