பாஜக வேட்பாளருக்கு எதிராக கடும் விமர்சனம் : பிரபல சாமியார் மீது வழக்குப்பதிவு

தார்வாட் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பிரகலாத் ஜோஷியை கடுமையாக விமர்சனம் செய்து பேசியதாக திங்கலேஸ்வர் சுவாமிஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக மதச்சார்ப்பற்ற ஜனதா தளம், பாஜக கட்சிகள் இணைந்து காய்களை நகர்த்தி வருகின்றன.

இந்த நிலையில், தேர்தல் நேரத்தில் பல்வேறு வகுப்புனரிடையே வெறுப்புணர்வுத் தூண்டும் வகையில் பேசியதாக கர்நாடகாவில் பிரபலமான சாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டம், ஷிரஹட்டியில் உள்ள பாவைக்யதா பீடத்தைச் சேர்ந்தவர் திங்கலேஸ்வர் சுவாமிஜி. நவலகுண்டா மார்க்கெட்டில் நடந்த ஸ்வாபிமானி வாக்காளர் மாநாட்டில் திங்கலேஸ்வர் சுவாமிஜி கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், ‘பஸ்மம் போனது குங்குமம் வந்தது. பண்டாரம் போனது குங்குமம் வந்தது. சரணு சரணாரத்தி போனார், ஹரி ஓம் வந்தார் என்று பேசினார். தார்வாட் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பிரகலாத் ஜோஷியை குறிவைத்து திங்கலேஸ்வர் சுவாமிஜி பேசியிருந்தார்.

இந்த நிலையில், பல்வேறு சமூகத்தினரிடையே பகைமை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டியதாக நவ்லகுண்டா காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் திங்கலேஷ்வர் சுவாமிஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.