அரியலூர் மாவட்டத்தில் சேலம் – செந்துறை புதிய பேருந்து வழி தடத்தை போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அரியலூர் மாவட்டம், செந்துறை ஊராட்சியில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், சேலம் மண்டலம், மெய்யனூர் கிளை சார்பில், புதிய பேருந்து வழித்தடத்தினை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்துத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பொது மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப நகரங்கள் முதல் கிராமங்கள் வரை, பேருந்து வசதி ஏற்படுத்தித் தரப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இன்றைய தினம் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்ப, செந்துறை முதல் சேலம் வரை புதிய பேருந்து வழித் தடத்தினை, போக்குவரத்துத் துறை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
அதன்படி சேலம் – திட்டக்குடி (வழி) ஆத்தூர், வேப்பூர், தொழுதூர் வரை பேருந்து இயக்கப்பட்டு வந்தது. தற்போது அரசுப்பேருந்து தடம் எண் 132யுஇ திட்டக்குடி – செந்துறை (வழி) வசிஷ்டபுரம், குழுமூர், ஜெயங்கொண்டம் பிரிவு (வழித்தடம் நீளம் 24 கி.மீ) நீட்டிப்பு செய்யப்பட்டு, இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து சேலத்திலிருந்து செந்துறைக்கு காலை 4.26 மணிக்கு புறப்படும். அதேபோன்று காலை 9.35 மணிக்கு செந்துறையிலிருந்து ஆத்தூருக்கு புறப்படும். இந்த புறநகர் பேருந்து வழித்தடம் நீட்டிப்பால் வசிஷ்டபுரம், குழுமூர், ஜெயங்கொண்டம் பிரிவு பகுதி பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு, சேலத்திலிருந்து செந்துறைக்கு நேரடி பேருந்து வசதி கிடைக்கப்பெற்று பயனடைவார்கள். எனவே, இப்பேருந்து வசதியினை அனைவரும் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மேலாண் இயக்குநர் (சேலம்) பொன்முடி, துணை மேலாளர் வணிகம் சேலம் பாண்டியன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள், தொழிற்சங்கத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.