தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் குடி தண்ணீர் வரியை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோடை வெயிலின் தாக்கத்தால் புதுக்கோட்டையில் நகரில் பல்வேறு இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை நகராட்சி 42 வார்டுகளிலும் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்து ஆடுகிறது. மக்களின் குடிநீர் தேவையை தீர்த்துக் கொள்ள வெளி ஊர்களிலிருந்து குறிப்பாக வல்லத்திராகோட்டை உள்ளிட்ட கிராம பகுதிகளில் இருந்து வாகனங்களில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும் குடிநீர் குடம் ஒன்று பத்து ரூபாய் விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை சமீப காலமாக ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்தும் நகரவாசிகளுக்கு தேவையான குடிநீரை சம்பந்தப்பட்ட நிர்வாகம் வழங்கவில்லை என்றும் மக்கள் தங்கள் தேவைக்கு பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் பட்சத்தில் அப்புறம் எதற்கு குடிநீர் வரி செலுத்த வேண்டும் என்ற கூற்றுடன் களமிறங்கிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி குடிநீர் வரியை ரத்து செய்ய வேண்டும் மக்களுக்கு குடிநீர் தங்கு தடையின்றி வழங்க வேண்டும் என்று கூறி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரை சந்தித்து மனு அளிக்க திட்டமிட்டனர்.
ஆனால் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் புகார் மனு பெறும் பெட்டியில் தங்களது கோரிக்கை மனுவை அவர்கள் செலுத்தினர். போராட்டம் குறித்து அக்கட்சியின் மாவட்ட செயலாளர் நியாஸ் அகமது கூறுகையில்; புதுக்கோட்டை நகராட்சியில் 29 ஆண்டுகளுக்கு முன்னர் காவேரி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டுவரப்பட்டது. 10MLT தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப 1லட்சத்து 67ஆயிரத்து 56நபர்கள் பயன்பெறும் வகையில் 16MLTக்கு மேற்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதற்காக, பல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற செய்தி வரவேற்கத்தக்கது.
இருந்தாலும் மாற்று வழியாக ஒரு திட்டத்தை ஏற்படுத்தி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் செய்து தர வேண்டும். அப்படி தரும் பட்சத்தில் குறைந்த அளவே தண்ணீர் கொடுக்க முடியும் என்றால், சில தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு குறைந்த அளவு குடிநீர் வழங்கியும் பொதுமக்களுக்கு அவர்களின் தேவைக்கான தண்ணீரை முழுமையாக வழங்க வேண்டும்
தற்போது கோடை கால வெப்பத்தால் மக்கள் குடிக்க தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வரும் நிலையில். குடிநீர் வண்டியில் வரும் தனியார் வியாபாரிகளிடம் ரூபாய் 10 முதல் 20 வரை விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் அவல நிலையில் தற்போது புதுக்கோட்டை நகரம் உள்ளது இதைக் கருத்தில் கொண்டு தினந்தோறும் பொதுமக்கள் காசு கொடுத்து வாங்கும் குடிநீரை நகராட்சி நிர்வாகமே கையில் எடுத்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு நீண்ட நாட்களாக வராத தண்ணீருக்கு, பொதுமக்கள் வரி கட்டுவதை நடப்பாண்டில் முற்றிலுமாக வரியை ரத்து செய்ய வேண்டும் என்றார்.