25,000 ஆசிரியர்கள் பணி நீக்க வழக்கு மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி ?

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியர் நியமனங்கள் ரத்து செய்யப்பட்டது தொடர்பான மேல் முறையீட்டு வழக்கு விசாரணையின்போது, அம்மாநில அரசிடம் உச்சநீதிமன்றம் இன்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியது.

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரிய கடந்த 2016ம் ஆண்டு 25,753 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பிறப்பித்த உத்தரவில் 2016ம் ஆண்டு நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ததோடு, அவர்கள் பெற்ற சம்பளத்தை 12 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது தலைமை நீதிபதி சந்திரசூட், “ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது மாநில அரசு ஏன் கூடுதல் பதவிகளை உருவாக்கி, காத்திருப்புப் பட்டியலில் உள்ளவர்களை நியமித்தது?” என கேள்வியெழுப்பினார்.

அப்போது மேற்கு வங்க அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், “அனைத்து ஆசிரியர் நியமனங்களும் சட்ட விரோதமானவை என்பது சிபிஐ வழக்கு கூட அல்ல. ஆசிரியர் – மாணவர் விகிதமே இத்தகைய நியமனத்துக்கு காரணம்” என்றார். மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா ஆஜராகி வாதிடுகயில், “உயர் நீதிமன்ற அமர்வுக்கு வேலைகளை ரத்து செய்வதற்கான அதிகார வரம்பு இல்லை. அதன் உத்தரவுகள் இந்த விஷயத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுடன் முரண்படுகின்றன” என்றார்.

அதைத் தொடர்ந்து நீதிபதி, ஓஎம்ஆர் தாள்கள் மற்றும் விடைத்தாள்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்கள் அழிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினார். மேலும், “இதுபோன்ற முக்கியமான விஷயத்துக்கு ஏன் டெண்டர் விடவில்லை?” என தலைமை நீதிபதி கேட்டார்.

அதைத் தொடர்ந்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விண்ணப்பதாரர்களிடம் பள்ளி சேவை ஆணையம் தன்னிடம் தரவுகள் இருப்பதாக தவறாக கூறியுள்ளதா என தலைமை நீதிபதி கேட்டார். அதற்கு பதிலளித்த ஜெய்தீப் குப்தா, “தரவுகள் எதுவும் தற்போது இல்லை. ஆனால் அது இருக்கலாம்” என்று பதிலளித்தார். அதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறுகையில், “இது முறையாக நடந்த மோசடி. பொது வேலைகள் இன்று மிகவும் பற்றாக்குறையாக உள்ளன. மேலும் அவை சமூக இயக்கத்துக்காக பார்க்கப்படுகின்றன. நியமனங்கள் மோசடியானதாக இருந்தால் அமைப்பில் (சிஸ்டம்) என்ன இருக்கும்? மக்கள் நம்பிக்கையை இழப்பார்கள். இதை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?” என கேள்வி எழுப்பியதாக கூறினார்.