இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கும் : மருத்துவர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயரும் என சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர் பிரஃபுல் ரெட்டி (49) நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதனை கண்டறிந்ததிலிருந்து புற்று நோய் பரவலைத் தடுக்க கீமோதெரபி, கதிர்வீச்சு உள்ளிட்ட சிகிச்சைகளை எடுத்துக் கொண்டு வருகிறார். கூடவே வாந்தி, தலைவலி மற்றும் வயிற்றுப்புண் உள்ளிட்ட உபாதைகளையும் எதிர்கொண்டு வருகிறார். எனினும் பிரஃபுல் ரெட்டிக்கு மருத்துவர்கள் நம்பிக்கை அளித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் தீப்தி (12) என்ற சிறுமி ‘வில்ம்ஸ் டியூமர்’ பிரச்சினைக்கு சிகிச்சை பெற்று வருகிறார். இது சிறுநீரகங்களில் உருவாகி முக்கியமாக குழந்தைகளை பாதிக்கும் ஒரு அரிய வகை புற்றுநோயாகும். இச்சிறுமி தற்போது கதிர்வீச்சு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இது தோல் பாதிப்பு மற்றும் முடி உதிர்தல் போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என அவரது மருத்துவர் சாரு ஷர்மா கூறியுள்ளார்.

இவை குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே நடக்கும் புற்று நோய் பாதிப்புகள் அல்ல; இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக குழந்தைகள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டு வருகிறது. இது உலகளவிலான பாதிப்புகளில் மிக வேகமான உயர்வைக் குறிக்கிறது.

இந்திய பன்னாட்டு சுகாதாரக் குழுமமான அப்பல்லோ மருத்துவமனை குழுமம், கடந்த மாதம் வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தெற்காசிய நாட்டை உலகின் புற்றுநோய் தலைநகரம் என குறிப்பிட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த சுகாதாரம் குறைந்து வருவதற்கான ஆபத்தான அறிகுறியை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. இது புற்றுநோய் மற்றும் பிற தொற்றாத நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த 2020ம் ஆண்டில் சுமார் 1.4 மில்லியனாக இருந்த வருடாந்திர புற்றுநோய் பாதிப்பாளர்களின் எண்ணிக்கை 2025ம் ஆண்டில் 1.57 மில்லியனாக உயரும் என இந்த ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது. மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய் ஆகியவை பெண்களை பாதிக்கும் மிகவும் பொதுவான புற்றுநோய்களாகும். இந்திய பொது சுகாதார அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் கே. ஸ்ரீநாத் ரெட்டி கூறுகையில், “புற்று நோயாளிகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது” என்றார்.

டெல்லி மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை மைய இயக்குனர் அசித் அரோரா கூறுகையில், “நான் இதை ஒரு தொற்றுநோய் என அழைக்க விரும்பவில்ல. ஆனால் 2020 உடன் ஒப்பிடும்போது 2040க்குள் புற்றுநோய் பாதிப்புகள் இரட்டிப்பாகும். அவற்றில் பலவற்றை தனிப்பட்ட, சமூக மற்றும் அரசு மட்டங்களில் தடுக்க முடியும். ஆனால் எதையும் செய்யாவிட்டால், ஒரு சமூகமாக நாம் பெரும் விலையை செலுத்த வேண்டியிருக்கும்” என தெரிவித்துள்ளார்.