ஆம்பூர் அருகே கோழிப்பண்ணையில் தீ விபத்து : தீயில் கருகிய 5,000 கோழிகள்

ஆம்பூர் அருகே துரை என்பவருக்குச் சொந்தமான கோழிப்பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில் 5,000 கோழிகள் தீயில் கருகி பலியாகின. தீயை அணைக்கும் பணியில் ஆம்பூர் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே அரங்கன் துர்கம் பகுதியில் துரை என்பவர் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்த கோழிப்பண்ணையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகளை வளர்த்து வந்தார். இந்நிலையில், இன்று காலையில் வழக்கம்போல கோழிப்பண்ணையில் ஊழியர்கள், கோழிக் குஞ்சுகளுக்கு உணவளித்து வந்தனர். அப்போது திடீரென பண்ணையின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. அந்த தீ மளமளவென வேகமாக பரவியது. இதைப்பார்த்து பதறி அடித்து வெளியே ஓடிவந்த ஊழியர்கள், தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆம்பூர் தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோழிப்பண்ணை முழுவதும் மளமளவென தீப்பிடித்து எரிந்ததால், பண்ணைக்குள் இருந்த 5,000 கோழிகள் தீயில் கருகி பலியாகின. இந்த திடீர் தீ விபத்தில் கோழிப்பண்ணையும் முழுமையாக எரிந்து நாசமானது.

இந்த தீ விபத்துக்கு, பண்ணையில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என்று தெரியவந்துள்ளது. கோழிப்பண்ணை தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.