நயினார் நாகேந்திரன் மீதான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் : சத்யபிரதா பேட்டி

“தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு செய்யும்” என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேப்பம்பட்டு தனியார் கல்லூரி வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்தேன். எந்தவித பாதுகாப்பு குறைபாடும் கண்டறியப்படவில்லை. அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன.

நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் கண்காணிப்பு கேமரா, ஓவர்லோடு காரணமாக சற்று நேரம் பழுது ஏற்பட்டது. அது சரி செய்யப்பட்டு விட்டது. தமிழகம் முழுவதும் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தில் அதுபோன்ற ஓவர் லோடு ஆகாமல் இருப்பதற்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளில் பணியமர்த்தப்பட்டுள்ள தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வெயிலின் தாக்கத்தினால் உடல் சோர்வு ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும். தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் செலவின பார்வையாளர்கள் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யும்” என்றார்.