சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் வழக்குப்பதிவு

சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீதும் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் சமீபத்தில்  யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்திருந்த பேட்டியில், போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீஸார் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இது பெரும்  சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து கோவை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கின் பேரில் தேனியில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கடந்த சனிக்கிழமை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர். கோவை 1-வது ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு இம்மாதம் 17 ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளதால் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 

அவரது காரில் அரை கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவர் மீதும்,  அவரது கார் டிரைவர் ராம்பிரபு (24), உதவியாளர் ராஜரத்தினம் (42) ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர். 

இந்த நிலையில் சவுக்கு சங்கரின் ஆட்சேபகரமான கருத்துக்கள் அடங்கிய பேட்டி தொடர்பான வீடியோவை வெளியிட்ட தனியார் யூடியூப் சேனல் மீதும் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  கோவை சைபர் கிரைம் போலீஸார்   வழக்குப்பதிவு செய்து இரண்டாவது குற்றவாளியாக சேனல் உரிமையாளரை சேர்த்துள்ளனர். இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.