நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் கண்காணிப்பு கேமராக்கள் பழுது ஏற்படாமல் தடுக்க உரிய நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்டிராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில், வேட்பாளர்களின் அங்கீகரிகப்பட்ட முகவர்கள் நாள் முழுவதும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் பார்வையிடுவதற்காக ஸ்டிராங் ரூமின் சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 26ம் தேதி மாலை முகவர்கள் அமரும் இடத்தில் உள்ள டிவி திரையில், ஸ்ட்ராங் ரூம் கண்காணிப்பு கேமரா பதிவுகள் திடீரென ஔிபரப்பாகாமல் போய்விட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனே, இதுகுறித்து அங்குள்ள தொழில்நுட்ப பிரிவு அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக தொழில்நுட்ப பிரிவினர் அதை சரி செய்துள்ளனர். அதன்பின், 20 நிமிடங்கள் கழித்து வழக்கம்போல் ஸ்ட்ராங் ரூம் கண்காணிப்பு கேமரா பதிவுகள் திரையில் தெரிந்தது. இதற்கிடையில், தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான அருணா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்து, தொழில்நுட்பக் கோளாறு பிரச்சினையை சரி செய்யுமாறு அறிவுறுத்தினார். திடீரென மாறிய வானிலை காரணமாக இந்த பிரச்சினை எழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி செல்வதற்காக கோவை வந்த மத்திய இணை அமைச்சரும், நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சிசிடிவி கேமராக்கள் பழுது ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை. சேலம், நாமக்கல்லில் நிலவும் அளவிற்கு வெப்பம் நீலகிரியில் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.” என்றார்.
மேலும், “ கோவை, நீலகிரி, தென் சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பாஜகவினரின் வாக்குகள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. ஆனால் தோல்வியை மறைப்பதற்காக காங்கிரஸ் கட்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது பழி போட்டு வருகின்றனர். ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணித்ததின் மூலம், ராகுல் காந்தி ராமரை புறக்கணிக்கிறாரா அல்லது இந்து மதத்தை புறக்கணிக்கிறாரா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.” என்று எல்.முருகன் கூறினார்