கர்நாடகாவில் ஆபாச வீடியோக்கள் சர்ச்சை : மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம்

ஆபாச வீடியோக்கள் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக கூட்டணி – மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளருமான பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி, பாஜகவுடன் கூட்டணியில் இருக்கிறது. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில், பாஜக 25 தொகுதிகளிலும், மஜத 3 இடங்களிலும் போட்டியிடுகின்றன. கர்நாடக மாநிலத்தில் முதல்கட்டமாக 14 மக்களவைத் தொகுதிகளுக்கு கடந்த 26-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

ஹாசன் தொகுதியில் பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடும் நிலையில், தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன்பு, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாலியல் வீடியோக்கள் இணையத்தில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 300-க்கும் அதிகமான பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் ஹாசன் தொகுதி முழுவதும் காட்டுத் தீயாக பரவியது. அதுவும் ஹாசன் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதிக்கு முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் அத்தொகுதி முழுவதும் வாட்ஸ் அப்களில் வலம் வந்தன. இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இதற்கிடையில், மாநில மகளிர் குழுவின் தலைவி நாகலட்சுமி சவுத்ரி, அந்த வீடியோ தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் சித்தராமையாவுக்குக் கடிதம் எழுதினார். அதைத் தொடர்ந்து, கர்நாடக முதல்வர் சித்தராமையா தன் எக்ஸ் பக்கத்தில், ‘பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோ குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்திருக்கிறது. அந்த வீடியோ கிளிப்களில் பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. எனவே, கர்நாடக மாநில மகளிர் ஆணையம், சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்குமாறு கேட்டுக் கொண்டது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஜேடிஎஸ் கட்சியின் ஹாசன் வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்திருக்கிறது என கர்நாடக முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. அவர் பெங்களூரில் இருந்து ஜெர்மனுக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

வட கர்நாடகாவின் 14 மக்களவைத் தொகுதிகளில் மே 7-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ விவகாரம் மிக கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என சொல்லப்படுகிறது.