மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன் : ஜெகன்மோகன் வாக்குறுதிகள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 3 லட்சம் வரை வட்டியில்லா கடன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு வரும் மே மாதம் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், தெலுங்கு தேசம் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அமராவதி தாடேபல்லி கூடம் பகுதியில் உள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 2 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

இதில் ஏறக்குறைய கடந்த 2019 தேர்தலில் தான் அறிவித்திருந்த வாக்குறுதிகளையே மீண்டும் இம்முறையும் அவர் அறிவித்துள்ளார். பைபிள், குரான், பகவத் கீதை போன்றுதான் தேர்தல் வாக்குறுதிகளை மதிப்பதாகவும் முதல்வர் ஜெகன் கூறினார்.

அவரது தேர்தல் வாக்குறுதியின்படி, ‘அம்ம ஒடி’ எனும் திட்டத்தின் கீழ், தங்களது பிள்ளைகளை பள்ளிகளில் சேர்க்கும் தாய்மார்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தும் தொகை ஆண்டுக்கு ரூ.15 ஆயிரத்திலிருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. முதியோர் உதவி தொகை வரும் 5 ஆண்டுகளில் 2 முறை ரூ. 3,500 வரை அதிகரிக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வழங்கிடும் உதவி தொகை ரூ.13,500-லிருந்து ரூ.16 ஆயிரமாக அதிகரிப்பு, ஏழைகளுக்கு நகர்ப்புறங்களில் ரூ.2 ஆயிரம் கோடியில் இலவச வீடு கட்டி தரும் திட்டம், தகுதியான அனைவருக்கும் வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டம், ரூ. 3 லட்சம் வரை மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வட்டியில்லா கடனுதவி திட்டம் என 9 திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஓட்டு கேட்க உரிமையில்லை என இந்த தேர்தல் அறிக்கை குறித்து முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திர பாபு நாயுடு விமர்சித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: தேர்தல் வாக்குறுதி என்பது ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஒரு விளையாட்டாகி விட்டது. அது ஒரு பைபிள், குரான், பகவத் கீதை போன்றது என வாய் கூசாமல் பொய் கூறுகிறார். கடந்த 2019 தேர்தலின் போது, படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவேன் என்றும், அப்படி அமல்படுத்தாவிட்டால், நான் 2024ல் நடைபெறும் தேர்தலில் வாக்கு கேட்க மக்கள் முன்வரமாட்டேன் என்றும் ஜெகன் கூறியிருந்தார். இப்போது எந்த முகத்தை வைத்துக்கொண்டு ஜெகன் மக்களிடம் வாக்கு சேகரிக்க வருகிறார் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். மேலும், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019-ல் கொடுத்த இந்த வாக்குறுதியை நாயுடு தனது சமூக வலைத்தளத்திலும் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார்.