மணிப்பூரில் மீண்டும் வன்முறை : குழந்தைகள், பெண்கள் வெளியேற்றப்படுவதாக போலீஸ் தகவல்

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் தலைநகரின் இம்பாலின் மேற்கு மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இரண்டு குழுக்களின் கிராம தன்னார்வளர்களுக்கும் இடையே இன்று துப்பாக்கிச் சண்டை நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், “காங்போக்பி மாவட்டத்தில் இம்பால் பள்ளத்தாக்கின் மலைப்பகுதியில் உள்ள கவுட்ரூர் கிராமத்தில பல்வேறு ஆயுதம் தாங்கியவர்கள் கண்மூடித்தனமாக ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டனர். இதில் சில குண்டுகள் கிராமவாசிகளின் வீட்டுச் சுவர்களை துளைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்படுகின்றனர். இந்த மோதலில் கிராமத்தினரிடம் பீதியை ஏற்படுத்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘பம்பி’ எனப்படும் மோட்டார் குண்டுகள் வீசப்பட்டுள்ளன. இதற்குப் பதிலடியாக கவுட்ரூக் கிராமத்தின் தன்னார்வலர்கள் பதிலடி கொடுத்தால் துப்பாக்கிச் சண்டை நிகழந்துள்ளது. சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு மே 3-ம் தேதி மணிப்பூர் மாநிலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தில் இரண்டு இனக்குழுக்களுக்குள் நிகழ்ந்து வரும் துப்பாக்கிச் சண்டைகளுக்கு கவுட்ரூக் கிராமமும் ஒரு சாட்சியாக இருந்து வருகிறது. அதிக துப்பாக்கிச் சண்டை நடக்கும் இடங்களில் ஒன்றாக இந்த கிராமம் அடையாளம் காணப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மே மாதம், மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குகி பழங்குடி இனமக்களுக்கு இடையே இனக்கலவரம் மூண்டது. இந்தக் கலவரத்தில் 200-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து இடம்மாற்றப்பட்டுள்ளனர். அதிலிருந்து மணிப்பூர் முழுவதுமாக மீளவில்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது மோதல்கள் நிகழ்கின்றன.