கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் வெற்றி : குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர்

கேண்டிடேட் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் டி.குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை வழங்கி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை, கனடாவின் டொராண்டா நகரில் நடைபெற்ற கேண்டிடேட் செஸ் தொடரில் வெற்றி பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் இன்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது குகேஷுக்கு உயரிய ஊக்கத்தொகையாக ரூ.75 லட்சத்துக்கான காசோலை மற்றும் கேடயத்தை முதல்வர் வழங்கினார். இந்த சந்திப்பின்போது, தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துறை அதிகாரிகள், குகேஷின் பெற்றோர் உடனிருந்தனர்.

முன்னதாக, கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றார். மொத்தம் 9 புள்ளிகள் பெற்றுள்ள அவர் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறி சாதனை படைத்தார்.

கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் இந்த கேண்டிடேட்ஸ் செஸ் தொடர் நடைபெற்றது. 14 சுற்றுகள் கொண்ட இந்த செஸ் தொடரில் மிக இளம் வயதில் வெற்றி பெற்றவர் என்ற சாதனையை டி.குகேஷ் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கும் இரண்டாவது இந்தியர் என்ற சாதனையையும் அவர் எட்டினார். 14-வது சுற்று ஆட்டத்தில் டி.குகேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹிகாரு நகமுராவுடன் மோதினார். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய குகேஷ் ஆட்டத்தை டிரா செய்திருந்தார்.