மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோறும் காலை, இரவு நேரங்களில் சுவாமி-அம்பாள் மாசி வீதிகளில் உலா வந்து அருள்பாலித்து வருகின்றனர்.

விழாவின் 8-ம் நாளான நேற்று மதுரை நகரின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வகையில் மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. கோவிலில் உள்ள அம்மன் சன்னதி முன்பு உள்ள ஆறுகால் பீடத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராயர் கீரிடம் சாற்றி, ரத்தின செங்கோலுடன் மீனாட்சி காட்சி அளித்தார்.

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மதுரை மீனாட்சிக்கு சுந்தரேஸ்வரருடன் இன்றைய தினம் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது. வெளிநாடுகளில் இருந்து வரவழைத்த பூக்களால் மணமேடைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெற்ற உடன் ஏராளமான பெண்கள் புதுதாலி அணிந்து கொண்டனர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் இரவில் நடந்தது. அப்போது மதுரையின் அரசியாக மீனாட்சிக்கு பட்டம் சூட்டப்பட்டது. அதை தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டத்து அரசியாக போரில் தேவர்களை வென்று, இறுதியில் சுந்தரேசுவரரிடம் போர் புரியும் திக்கு விஜயம் நிகழ்ச்சி நேற்று இரவில் நடந்தது. மதுரையின் பட்டத்தரசியாக முடிசூட்டிக்கொண்ட உடன் எட்டு திக்கும் வென்று வர அம்மன் திக் விஜயம் செல்வதைக் காணவே ஏராளமான பக்தர்கள் நகர வீதிகளில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மீனாட்சி திருக்கல்யாணம் சித்திரை திருவிழாவில் முத்திரை பதிக்கும் நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோவிலில் உள்ள வடக்கு-மேற்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இன்று காலை நடக்கிறது. இதற்காக மண்டபம் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பில் ஊட்டி, பெங்களூரு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மீனாட்சி அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழும் போது வானில் இருந்து வண்ண மலர்கள் கொட்டும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி இன்று அதிகாலை 4 மணி அளவில் சுந்தரேசுவரரும், மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வந்தனர்.

புது தாலி மாற்றிய பெண்கள் இன்று காலை 8.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் மிதுன லக்னத்தில் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. வேத மந்திரங்கள் ஓத, பவளக்கனிவாய் பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பக்தர்களின் வாழ்த்தொலி விண்ணை முட்ட, மீனாட்சியின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டது. அப்போது திருமண நிகழ்ச்சியை காண வந்திருக்கும் மணமான பெண்கள், தங்கள் கழுத்தில் உள்ள தாலியை மாற்றி புதுத்தாலி அணிந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து. மாலையில் சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், மீனாட்சி பூப்பல்லக்கிலும் வீதி உலா வருவார்கள். இதனைத் தொடர்ந்து, நாளை (ஏப்.22) திருத்தேர் உற்சமுமும், செவ்வாய்க்கிழமை கள்ளழகர் வைகையில் எழுந்தருளலும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.