“காங்கிரஸ் கட்சியின் ‘ராகுல்யான்’ இன்னும் எந்தப் பகுதியிலும் நிலைநிறுத்திப்படவில்லை” – கேரளாவில் ராஜ்நாத் சிங் கிண்டல்

“காங்கிரஸ் கட்சியின் ‘ராகுல்யான்’ இன்னும் எந்தப் பகுதியிலும் நிலைநிறுத்திப்படவில்லை” என்று ராகுல் காந்தியையும், காங்கிரஸையும் பாதுக்காப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்தார்.

கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த பாஜக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “இன்னும் 5 ஆண்டுகளில் பாஜக ககன்யான் திட்டத்தைத் தொடங்க உள்ளது. ஆனால், கடந்த 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவரின் அறிமுகம் இன்னும் நிகழ்த்தப்படவில்லை. காங்கிரஸின் ராகுல்யான் இன்னும் எங்கும் நிலைநிறுத்தப்படவில்லை.

உத்தரப் பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு ராகுல் காந்தி புலம்பெயர்ந்துள்ளார். கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார். இந்த முறை வயநாட்டிலும் ராகுல் காந்தி வெற்றி பெற மாட்டார். வயநாடு தொகுதி மக்கள் இம்முறை ராகுலை தேர்ந்தெடுக்க மாட்டோம் என்று முடிவு செய்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில், மக்களவைத் தேர்தலில் அமேதி அல்லது ரேபரேலியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி. எனக்கு கட்சி தலைமையிடம் இருந்து எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், வேட்பாளர் தேர்வு முடிவுகள் அனைத்தும் கட்சித் தலைமையால்தான் எடுக்கப்படுகின்றன” என்று தெரிவித்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் அமேதியில் பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் தோல்வியடைந்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கேரளா காங்கிரஸின் மூத்தத் தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணியின் மகனும் பாஜக வேட்பாளருமான அனில் அந்தோணியை ஆதாரித்து பேசிய ராஜ்நாத் சிங், “அவர் (ஏ.கே.அந்தோணி) கொள்கை பிடிப்பு மிக்கவர் என்பது எனக்குத் தெரியும். அவரது நிர்பந்தத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. அனில் அந்தோணியை ஆதரிப்பது அவருக்கு மிகவும் கடினம்.

எனினும், அனில் உங்களின் மகன் என்பதை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனில் அந்தோணிக்கு வாக்களிக்காமல் போகலாம், வாக்களிக்கச் சொல்லி பிரச்சாரம் செய்யாமல் இருக்கலாம். என்றாலும் நீங்கள் அவரின் தந்தை. அதனால் உங்களின் ஆசீர்வாதம் எப்போதும் அவருக்கு வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.