எல்கர் பரிஷத் வழக்கில் ஷோமா சென்னுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்

எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஷோமா சென்னுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.

மகாராஷ்ட்ராவின் புனே அருகே உள்ள சிறிய கிராமமான பீமா கோரேகானில் கடந்த 2018, ஜனவரி ஒன்றாம் தேதி நிகழ்ந்த வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார். பலர் காயமடைந்தனர். இந்த வன்முறையின் பின்னணியில் தீவிர இடதுசாரிகள் இருந்ததாகக் கூறப்பட்டது.

இந்த வழக்கில் ஆங்கில இலக்கிய பேராசிரியரும், சமூக ஆர்வலருமான ஷோமா சென், சட்டவிரோத தடுப்புச் சட்டத்தின் பிரிவு 43(டி)(5)ன் கீழ் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஷோமா சென் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். வயது முதிர்வு மற்றும் மருத்துவ கவனிப்புக்கான தேவை உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என அவர் கோரி இருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி அனிருத்தா போஸ் தலைமையிலான அமர்வு, மகாராஷ்டிராவை விட்டு வெளியேறக் கூடாது, பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஷோமா சென்னுக்கு ஜாமீன் வழங்கியது. ஜாமீன் நிபந்தனைகளை மீறக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், தற்போதைய உத்தரவு என்பது இடைக்கால முடிவு என்றும், வழக்கின் தன்மை மற்றும் விசாரணை நீதிமன்றத்தின் இறுதி உத்தரவுகளைப் பொறுத்தது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது. ஜாமீன் மனுவை என்ஐஏ எதிர்க்கவில்லை. மேலும், ஷோமா சென்னை காவலில் வைத்திருப்பது தேவையற்றது என நீதிமன்றத்தில் தெரிவித்தது.

1818-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி, மகாராஷ்டிராவில் பிரிட்டிஷ் ராணுவத்துக்கும் பேஷ்வா பாஜிராவ் தலைமையிலான படைக்கும் இடையே போர் நடைபெற்றது. பிரிஷ்ட்டிஷ் ராணுவத்தில் தலித்துகள் அதிக அளவில் இணைந்து போரிட்டனர். இந்தப் போரில் பிரிட்டிஷ் ராணுவம் வெற்றி பெற்றது. அதன் நினைவாக புனே அருகே உள்ள பீமா கோரேகான் என்ற கிராமத்தில் வெற்றித் தூண் நிறுவப்பட்டது.

இந்த வரலாற்றுச் சம்பவத்தின் 200-ம் ஆண்டை முன்னிட்டு கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பீமா கோரேகானில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது, தலித்துகளுக்கும் மராத்தா குழுக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார்; பலர் காயமடைந்தனர். இந்த வன்முறை தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.