“ஆம் ஆத்மியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவாலே சிறந்தவர்” – டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ்

தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவால்தான் சிறந்த நபர் என அக்கட்சியின் முக்கியத் தலைவரும், டெல்லி அமைச்சருமான சவுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அரவிந்த் கேஜ்ரிவாலின் செய்தியை தற்போது சுனிதா கேஜ்ரிவால் வழங்கி வருகிறார். இது கட்சியினர் மத்தியிலும் ஆதரவாளர்கள் மத்தியிலும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதை நாங்கள் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறோம். தற்போதைய சூழலில் ஆம் ஆத்மி கட்சியை ஒருங்கிணைக்க சுனிதா கேஜ்ரிவால்தான் சிறந்த நபர்” என தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக சுனிதா கேஜ்ரிவால் பிரச்சாரம் செய்வாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த சவுரப் பரத்வாஜ், “அது நிகழ்ந்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம். ஆனால், பிரச்சாரத்தில் பங்கேற்பது என்பது அவரது தனிப்பட்ட முடிவு” என்று கூறினார்.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. அமலாக்கத் துறையின் விசாரணையை அடுத்து அவரை வரும் 15-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அரவிந்த் கேஜ்ரிவால் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

திஹார் சிறையில் இருந்தவாறு அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த செய்திகளை மூன்று முறை அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்திருக்கிறார். அதோடு, இந்தியா கூட்டணி சார்பாக டெல்லியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சுனிதா கேஜ்ரிவால், அங்கு கேஜ்ரிவாலின் உரையை வாசித்தார். மேலும், கேஜ்ரிவால் ஒரு சிங்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுனிதா கேஜ்ரிவாலின் இத்தகைய நடவடிக்கைகளை விமர்சித்துள்ள பாஜக, டெல்லியில் ஒரு ராப்ரி தேவி (லாலு பிரசாத் யாதவின் மனைவி) உருவாகி வருவதாக கூறி வருகிறது. இந்நிலையில், சவுரப் பரத்வாஜின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெற்றுள்ளது.