குவாஹாட்டி விமான நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு : மூத்த ஐபிஎஸ் அதிகாரி மீது உள்துறை நடவடிக்கை

குவாஹாட்டி விமான நிலையத்தில் பெண்ணை பலவந்தமாகக் கட்டியணைக்க முயன்ற சிஆர்பிஎப் ஏடிஜி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அயல்பணியிலிருந்தவரை உத்தரப்பிரதேசத்துக்கு திரும்ப அனுப்பி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அயல்பணியில் கடந்த வருடம் ஜுன் முதல் இருந்தவர் வினோத் குமார் சிங். 1994 ஆம் ஆண்டு பேட்ச் ஐபிஎஸ் அதிகாரியான அவர் உபி மாநில பிரிவைச் சேர்ந்தவர்.

இவர் மத்திய பாதுகாப்புப் படையில் முக்கியமான சிஆர்பிஎப் பிரிவின் ஏடிஜியாக அமர்த்தப்பட்டிருந்தார். தனது பணி நிமித்தமான பயணத்துக்காக கடந்த மார்ச் 17 காலை குவாஹாட்டியின் லோக்பிரியா கோபிநாத் போர்தலாய் சர்வதேச விமானநிலையத்துக்கு வந்தார்.

வினோத்தை போன்றவர்களுக்கான விஐபி வரவேற்பறை பிரிவில் அவர் காத்திருந்தார். அப்போது அங்கு பணியிலிருந்த இளம்பெண் வழக்கம்போல் விஐபி பயணிகளைக் கவனிப்பதுபோல் இன்முகத்துடன் பணிவிடை செய்துள்ளார். அப்போது அதிகாரியான வினோத், தொடர்ந்து அப்பெண்ணை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. மேலும் அவர், கிளம்பும்முன் அப்பெண்ணை பலவந்தமாகக் கட்டியணைக்கவும் முயன்றதாகத் தெரிகிறது. இதனால், பெரும் அதிர்ச்சி அடைந்த அப்பெண் விமான நிலையத்தின் தலைமை அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தார்.

தனது புகாரில் அப்பெண் குறிப்பிடுகையில், “என்னை வரவேற்பறையில் சந்தித்ததும் ஏடிஜி எனது பணி மற்றும் குடும்பத்தை பற்றி விசாரித்தார். தொடர்ந்து அவர் என்னை உற்றுநோக்கியபடி இருந்தார். எனது சிரிப்பு, பல்வரிசை, உதடுகள் அழகாக இருப்பதாக அவர் வர்ணித்தார். எனக்கு எதிர்காலத்தில் தேவைக்கான உதவிகளுக்கு அவரை அழைக்க தன் கைப்பேசி எண் குறித்துக் கொள்ளவும் கட்டாயப்படுத்தினார்.

பிறகு என்னை கட்டியணைக்க விரும்புவதாகக் கூறினார். அதற்கு நான் அனுமதிக்கவில்லை. அதற்கு அவர், கட்டியணைப்பது என்பது சாதாரணமாக நடப்பதே எனத் தெரிவித்த போதும் நான் சம்மதிக்கவில்லை. அதையும் மீறி அவர், என்னருகில் வந்தவர் எனது கைகளை இழுத்து என்னை பலவந்தமாகக் கட்டியணக்க முயன்றார். ஏற்பில்லாத இந்த நடவடிக்கையில் நான் பின்னோக்கி சென்று தப்பினேன். இதன் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதன் மீது, அசாம் மாநில காவல்துறையினர் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் அப்பெண்ணின் குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இந்த அறிக்கையின் நகலை பெற்ற மத்திய உள்துறை அமைச்சகம், ஏடிஜி வினோத் குமார் சிங்கின் அயல்பணியை உடனடியாக ரத்து செய்து அவரது மாநிலப் பிரிவான உ.பி.க்கு திரும்ப அனுப்பிவிட்டது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அதிகாரி வினோத், தம் செயலுக்கு மன்னிப்பு கேட்டதாகக் கூறி, தனது புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார். பாதிக்கப்பட்ட இளம்பெண் பணியாற்றும் குவாஹாட்டி விமான நிலையமானது தனியார் பெருநிறுவனமான அதானி குழுமத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

உபியில் இன்னும் பணி அமர்த்தப்படாமல் உள்ள அதிகாரி வினோத் குமார் இதற்கு முன்பும் அயல்பணியாற்றிய வினோத், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரான ராஜ்நாத்சிங் அலுவலகத்திலும், என்எஸ்ஜி எனும் தேசியப் பாதுகாப்பு படையிலும் முக்கியப் பணியாற்றிவவர்.