“அதிமுக ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, ஸ்டாலின் திறந்து வைக்கிறார்” – இபிஎஸ் குற்றச்சாட்டு

உதகையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார். ஆனால், பாஜக குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வனுக்காக ஆதரவாக நீலகிரி மாவட்டம் உதகையில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று பிரச்சாரம் செய்தார். காலை 10.30 மணிக்கு உதகையில் பிரச்சாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டதால், நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி சமவெளிப் பகுதிகளில் இருந்தும் தொண்டர்கள் குவிந்தனர். கடும் வெயிலில் தொண்டர்கள் காத்திருந்த நிலையில், பகல் 12 மணியளவில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி உதகை வந்தார்.

உதகை ஏடிசி பகுதியில் குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் பிரச்சார வாகனத்தில் வந்த எடப்பாடி கே.பழனிசாமி, லோகேஷுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தில் அதிமுகவுக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டார். தனது அரை மணி நேர பேச்சில் திமுகவையும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியை கடுமையாக தாக்கி பேசினார்.

“நீலகிரி மாவட்டம் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமான மாவட்டம். இதனால், பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. வரும் மக்களவைத் தேர்தலிலும் நீலகிரி தொகுதியில் அதிமுகவை வெற்றி பெற செய்து, நீலகிரி அதிமுகவின் கோட்டை என நிரூபிக்க வேண்டும்” என்றார்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் முதல்வர் மற்றும் உதயநிதியுடன் உள்ள புகைப்படங்களை காட்டி, “உதயநிதி விரைவில் சிறைக்கு செல்வார். அது தேர்தல் நடப்பதற்குள்ளேயே நடக்கும்” என்றார். மேலும், “அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்” என்றார்.

மேலும், “நீலகிரி மக்களின் நலன் கருதி கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஸ்டாலின் திறந்து வைத்து, திமுக மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்தது போல கூறுகிறார். எனது அரசை இருண்ட ஆட்சி என ஸ்டாலின் கூறுகிறார். அவர் கண்களை மூடிக்கொண்டிருந்தால், இருட்டாக தான் இருக்கும். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பேசிய அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, திமுகவை கடுமையாக தாக்கி பேசினாரே தவிர, பாஜக குறித்தோ, பிரதமர் மோடி, பாஜக வேட்பாளர் எல்.முருகன் குறித்தோ ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.