ஓசூரில் கிரஷர் உரிமையாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை

ஓசூரில் கிரஷர் உரிமையாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையில் நகை, பணம் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஜலகண்டேஸ்வரர் நகரைச் சேர்ந்த லோகேஷ்குமார் இவர் கடந்த 28-ம் தேதி கர்நாடகாவிலிருந்து ஓசூருக்கு காரில் வரும்போது, ஜூஜூவாடி சோதனை சாவடியில் பறக்கும்படையினர் அவரின் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ.10 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வருமான வரித் துறையினருக்கு பறக்கும் படையினர் தகவல் அளித்தனர்.

பின்னர் இது குறித்து ஓசூர் வருமான வரித் துறை உதவி இயக்குனர் விஷ்னுபிராசந்த் தலைமையிலான குழுவினர் லோகேஷ்குமார் வீட்டில் இன்று அதிகாலை முதல் சோதனை செய்தனர். இந்த சோதனையில் லோகேஷ்குமார் வீட்டில் ரூ. 1 கோடியே 20 லட்சம், சுமார் 100 பவுன் தங்க நகை பறிமுதல் செய்துள்ளதாகவும், அதனை மூக்காண்டப்பள்ளியில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு கொண்டு சென்று எண்ணும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

அதே போல் பேரண்டப்பள்ளியில் உள்ள லோகேஷ்குமாரின் கிரஷரிலும் சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் இது குறித்து லோகேஷ்குமாரிடம் வருமான வரித் துறையினர் விசாரணையில் கர்நாடக மாநிலம் கேஆர்புரா பகுதி சட்டமன்ற உறுப்பினர் பசவராஜியின் உதவியாளர் மஞ்சுநாத் என்பவரின் மருமகன் லோகேஷ்குமார் என தெரியவந்தது. தொடர்ந்து பணம் நகை குறித்து வருமான வரித் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.