திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க வேண்டும் சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளர் கோரிக்கை

சிவகங்கை மக்களைவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுகம், செயல்வீரர்கள் கூட்டம் ஆலங்குடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாஜக நிர்வாகி பிரபாகரன் தலைமை வகித்தார்.

கூட்டத்தில், சிவகங்கை தொகுதி பாஜக வேட்பாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக்கழகத் தலைவருமான தேவநாதன் பேசியது: சிவகங்கை மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு நாட்டின் முக்கிய பதவிகளான நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவி வகித்த ப.சிதம்பரம், சிவகங்கை தொகுதி மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. தொழிற்சாலைகளை உருவாக்கி,இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரவில்லை. அவரால் தொகுதி மக்களுக்கோ, தமிழகத்திற்கோ எவ்வித பயனும் இல்லை. இது மக்களவைத் தேர்தல் என்றாலும், திமுக- காங்கிரஸ் ஆகிய  கட்சிகளின் குடும்ப அரசியல், கொள்ளை அரசியலை தமிழகத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு முன்னோட்டமாகவே இந்த தேர்தல் உள்ளது.

அதனால், கூட்டணி கட்சியினர் இந்த தேர்தலின் அவசியம் புரிந்து பாஜக  வெற்றிக்காக பாடுபடவேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் ஒரு ஊழல் குற்றச்சாட்டுக்கு கூட ஆளாகாதவராக பிரதமர் மோடி திகழ்கிறார். அவரது. ஆட்சியின்  சாதனைகளையும், விவசாயிகளுக்கும், ஏழை, எளிய மக்களுக்கும் மத்திய அரசு அளித்துள்ள நலத்திட்டங்களை மக்களிடம் கூட்டணி கட்சியினர் எடுத்துரைத்தாலே புதுச்சேரி உள்பட் 40 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுவிடும். தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகால நடைபெற்றுவரும் திமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை விட போதை மருந்து உள்பட மக்கள் விரோதத்திட்டங்களே அதிகமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், கதிர் ஆனந்த் போல, பெண்களை இழிவாக பேசுவதும் தான் திமுகவின் நிலைப்பாடாக உள்ளது. எனவே, திமுக-காங்கிரஸ் கூட்டணியை மக்கள் புறக்கணிக்க தயாராகிவிட்டனர் என்றார்.