கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து பிரதமர் வீட்டை முற்றுகையிட முயற்சி : ஆம் ஆத்மி கட்சியினர் கைது

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைதைக் கண்டித்து பிரதமர் இல்லத்தை முற்றுகையிட முயன்ற ஆம் ஆத்மி கட்சியினர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் டெல்லி படேல் சவுக் மெட்ரோ நிலையத்துக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட முயன்ற பஞ்சாப் அமைச்சரும், ஆம் ஆத்மி பிரமுகருமான ஹர்ஜோத் சிங் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை கடந்த மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கேஜ்ரிவால் கைதை கண்டித்து ஆம் ஆத்மி, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் மகா பேரணி என்ற பெயரில் கண்டன ஆர்ப்பாட்ட பேரணியை டெல்லி ராம்லீலா மைதானத்தில் வரும் மார்ச் 31-ம் தேதி நடத்தவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை ஆம் ஆத்மி கட்சியினர் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பையும் மீறி, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அக்கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கைக்கு முன்னதாக, “படேல் சவுக் மெட்ரோ நிலையத்துக்கு முன்பாக போராட்டம் நடத்த யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. எனவே அனைவரும் கலைந்து செல்லுங்கள்” என டெல்லி போலீஸார் எச்சரித்திருந்தனர்.

இதனிடையே, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து பாஜக தலைவர் மன்ஜிந்தர் சிங் சிர்சா கூறுகையில், “அவர்கள் மதுபான ஊழல் வழக்கை திசை திருப்ப நினைக்கிறார்கள். சிறைக்குள் இருந்து தொடர்ந்து உத்தரவுகள் வருவதாகக் கூறுகிறார்கள். அமலாக்கத் துறையின் காவலில் இருந்து கெண்டு கேஜ்ரிவால் நாடகமாடுகிறார். அவர்கள் தயாரித்த போலி கடிதம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி துணைநிலை ஆளுநர் மற்றும் அமலாக்கத் துறை இயக்குநருக்கு எழுத்து பூர்வமாக புகார் அளித்துள்ளேன். கேங்ஸ்டர் மற்றும் குண்டர்கள் சிறையில் இருந்து கொண்டு தங்கள் குழுக்களை நடத்துவது போல டெல்லி அரசை நடத்த அவர்கள் (ஆம் ஆத்மி கட்சி) நினைக்கிறார்கள். அரவிந்த் கேஜ்ரிவால் போன்ற ஊழல்வாதிகள் முதல்வராக தொடரக்கூடாது. அவர் பதவி விலக வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.