பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்பு : ஆளுநர் ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.

பொன்முடிக்கு மீண்டும் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் முடிவு எடுக்க ஆளுநருக்கு 24 மணி நேரம் கெடு விதித்திருந்த நிலையில், இன்று மாலை 3.30 மணியளவில் பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்தப் பதவிப் பிரமாண நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், தமிழக முதல்வருடன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டனர். எளிமையாக நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் மீண்டும் அமைச்சராக பதவியேற்ற பொன்முடிக்கு ஆளுநர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

பொன்முடிக்கு மீண்டும் அவர் வகித்து வந்த உயர் கல்வித் துறையையே தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. அது தொடர்பான ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், தமிழக முதல்வர், மார்ச் 13 நாளிட்ட கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளபடி, க.பொன்முடிக்கு தமிழக அரசின் உயர்கல்வித் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கிட ஒப்புதல் அளிப்பதாக ஆளுநர் தெரிவித்திருந்தார்.

மேலும், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று, தற்போது அமைச்சர் காந்தியின் பொறுப்பில் உள்ள கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்தினை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்வதாகவும், அக்கடிதத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருந்தார்.