அதிமுகவுடன், தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது : இபிஎஸ் சந்திப்புக்குப் பின் பிரேமலதா அறிவிப்பு

“தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதியாகிவிட்டது. தேதியும், யாருக்கு சீட் என்பதையும் வெகுவிரைவில் அறிவிப்போம்” என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் 5 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடுகிறது. இதற்கான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில், தேமுதிக அலுவலகத்தில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (வியாழக்கிழமை) மரியாதை செலுத்தினார். அப்போது பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மரியாதை நிமித்தமாக தேமுதிக அலுவலகம் வந்தார். திருச்சியில் வரும் 24-ம் தேதி அதிமுக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்தில், தேமுதிக, கூட்டணி கட்சிகள் கலந்துகொள்ள உள்ளன. இதில் 40 தொகுதி வேட்பாளர்கள் கலந்துகொள்கின்றனர்.

அதில் கலந்து கொள்ளுமாறு இபிஎஸ் எனக்கு அழைப்பு விடுத்தார். ஒற்றுமையான கூட்டணி அதிமுக – தேமுதிக கூட்டணி. நாங்கள் நல்ல புரிதலோடு பயணிக்க இருக்கிறோம். விஜயகாந்த் இல்லாமல் பொதுச் செயலாளராக எனக்கு இது முதல் தேர்தல். எம்ஜிஆர், ஜெயலலிதா, கேப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் டிசம்பரில் மறைந்தவர்கள். மூன்று பேரும் சினிமாத் துறையை சேர்ந்தவர்கள். இந்த ஒற்றுமை அவர்களுக்குள் உண்டு. இவர்கள் ஆசியோடு இக்கூட்டணி வெற்றிபெறும்.

தமிழகத்தில் அமலாக்கத் துறை ரெய்டு என்பது தினம்தோறும் நடக்கிறது. அனைத்து அமைச்சர்களும் சோதனையை எதிர்கொண்டு தான் வருகின்றனர். யாராக இருந்தாலும் தப்பு செய்தால் உப்பு தின்றுதான் ஆக வேண்டும். விஜயபாஸ்கர் ரெய்டை எதிர்கொண்டு தன்னை நிரூபிக்க வேண்டும். அரசியல்வாதிகள் என்றால் இதனை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் பெறுவதை பொறுத்தவரை வெற்றிலை, பாக்கு மாற்றப்பட்டு உறுதி செய்யப்பட்டுவிட்டது. ஆம், ராஜ்ய சபா சீட் உறுதியாகிவிட்டது. தேதியும், யாருக்கு சீட் என்பதையும் பின்னாளில் சொல்கிறேன். வெகுவிரைவில் அந்த வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம்.

மக்களவை தேர்தலுக்கான தேமுதிக வேட்பாளர்கள் இன்று அல்லது நாளை அறிவிக்கப்படுவார்கள். ஐந்து தொகுதிக்கு யார் வேட்பாளர் என்பதை முடிவு செய்யவில்லை. அதிமுக உடன் தொகுதிகள் கலந்தாலோசித்து தான் வாங்கினோம். நாங்கள் கேட்ட தொகுதிகளைத் தான் கொடுத்தனர்.

இதற்கு முன் தேமுதிக தனித்தே களம்கண்டுள்ளது. இந்த 19 வருடங்களில் எத்தனையோ தேர்தல்களை சந்தித்துவிட்டோம். இப்போது வெற்றிக்கூட்டணி அமைந்துள்ளது. எங்களின் வெற்றி தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

தமிழகத்தை பொறுத்தவரை நட்புறவுடன் அனைத்து கட்சிகளும் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக இடம்பெற்றிருந்தது. அந்த நட்புறவுடன் பாஜக எங்களை அணுகியது உண்மைதான். ஆனால் தொண்டர்கள் ஆசைப்படி அதிமுக உடன் கூட்டணி வைத்துள்ளோம்” என்று பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.