மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டி : அண்ணாமலை தகவல்

“தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை தேசிய ஜனநாயக கூட்டணி முடித்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். பாஜகவின் சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் ஒரு 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பாளர் பட்டியல் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம்” என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “ஒரு மகிழ்ச்சியான செய்தி. தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டை முடித்துள்ளது. கூட்டணி கட்சித் தலைவர்களுடன் கலந்துபேசி 39 தொகுதிகளுக்கும் பங்கீடு முடிவடைந்துள்ளது. பாஜகவின் வேட்பாளர்கள் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளனர். பாஜகவின் சின்னத்தில் மாற்றுக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேலும் ஒரு 4 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர்.

இந்த 24 வேட்பாளர்கள் பட்டியல் உடன் தலைவர்கள் இன்று புதுடெல்லி செல்ல இருக்கின்றோம். பாஜக சார்பில் போட்டியிடும் 20 வேட்பாளர்கள் மற்றும் பாஜக சின்னத்தில் போட்டியிடும் 4 வேட்பாளர்கள் உள்பட 24 பேரின் வேட்பாளர் பட்டியலை இன்று மாலையில் இருந்து எந்தநேரத்திலும் வெளியாகலாம். அதேபோல், கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் அவர்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை அவர்கள் அறிவிப்பார்கள்.

பாஜக ஒரு தேசிய கட்சி. ஒரு மாநிலத் தலைவர் இங்கிருந்து வேட்பாளர்களை அறிவிப்பது வழக்கம் அல்ல. எனவே, அதற்கான அனைத்து தகவல்களையும் இங்கிருந்து தலைமைக்கு அனுப்பிவிட்டோம். எங்கள் கூட்டணியில், சுமுகமாக, மகிழ்ச்சியாக, திருப்திகரமாக எல்லோருக்கும் என்ன வேண்டுமோ அது கிடைத்திருக்கிறது. அனைவரும் வளர வேண்டும் என்ற அடிப்படையில், தேசிய ஜனநாயக கூட்டணியின் பங்கீடு முடிந்திருக்கிறது.

தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் வரவேண்டும் என்றால், அதில் பல கட்சிகள் இருக்க வேண்டும். பல வண்ணங்களும், சின்னங்களும் இருக்க வேண்டும். அனைத்து சமூகத்தில் இருந்தும் தலைவர்கள் இருக்க வேண்டும். அப்போதுதான், மக்களுக்கு அந்த கூட்டணியின் மீது ஒரு நம்பிக்கை வரும். திராவிட அரசியலுக்கு மாறுபட்ட அரசியலை பாஜக முன்னெடுக்கிறது. அதற்கான ஒரு பெரிய முயற்சி இந்த 2024 மக்களவைத் தேர்தல். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழக மக்கள் 39 தொகுதிகளிலும் மிகப் பெரிய ஆதரவு கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது” என்றார் அண்ணாமலை.

அப்போது அவரிடம் தமாகா, ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “தமாகாவைப் பொறுத்தவரை 3 இடங்களில் போட்டியிடுகின்றனர். அது தொடர்பாக அவர்கள் அறிவிப்பார்கள். அது குறித்து நான் அறிவிப்பது முறையாக இருக்காது. அதேபோல், ஓபிஎஸ் எப்போது வேண்டுமானாலும் செய்தியாளர்களைச் சந்திக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே, அது தொடர்பாகவும் நான் கூறுவது சரியாக இருக்காது. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் விரைவில் செய்தியாளர்களைச் சந்திப்பார்” என்று அண்ணாமலை கூறினார்.