புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான இலக்கிய மன்றப்போட்டி,வினாடி, வினாப்போட்டியினை முதன்மைக்கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில் இன்று மாவட்ட அளவிலான இலக்கியமன்றம், வினாடி, வினாப் போட்டிகள் நடைபெற்றது. போட்டியினை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் மா.மஞ்சுளா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது, அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 6- ம் வகுப்பு முதல் 9- ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில்  ஆகஸ்டு2023 , நவம்பர் 2023ஆகிய மாதங்களில் நடைபெற்ற வட்டார அளவிலான இலக்கிய மன்றம்,சிறார் திரைப்படம், வினாடி, வினா,  வானவில் மன்றம் ஆகிய போட்டிகளில் உள்ள 10 தலைப்புகளில் ஒவ்வொரு தலைப்பிலும் தேர்வு செய்யப்பட்ட 2 மாணவர்கள் வீதம் கல்வியியல் தகவல் மேலாண்மை முறைமையில் ( எமிஸ்) பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டி  நடத்தப்பட இருக்கிறது.

இன்று [புதன்கிழமை] நடைபெறும் இலக்கிய மன்றம், வினாடி, வினாப்போட்டியினைத் தொடர்ந்து சிறார் திரைப்படம், வானவில் மன்றம் ஆகியப் போட்டிகள் நாளை மறுநாள் 16ந்தேதி( வெள்ளிக்கிழமை) நடைபெற இருக்கிறது. இன்று[புதன்கிழமை] நடைபெறும் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களில் இருந்து ஒவ்வொரு தலைப்பிலும் சிறந்த மூன்று மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட இருக்கிறது. குறிப்பாக இதில் ஒவ்வொரு தலைப்பிலும் முதலிடம் பெறும் மாணவர் அடுத்த வாரம் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்பட  உள்ளனர்.

மாநில அளவிலான போட்டிகள் இந்த மாதம் 22 ந்தேதி முதல் அடுத்த மாதம் 7- ந்தேதி வரை நடைபெற உள்ளது. மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெறும் சிறந்த மாணவர்கள் பள்ளிக்கல்வித்துறையால் வெளிநாடுகளுக்கு கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று  மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க வாழ்த்துகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.   முன்னதாக முதன்மைக்கல்வி அலுவலக பள்ளித்துணை ஆய்வாளர் கி. வேலுச்சாமி வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் நடுவர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், பெற்றோர்கள், மாணவ,மாணவிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் புதுக்கோட்டை பள்ளித்துணை ஆய்வாளர் குரு.மாரிமுத்து நன்றி கூறினார்.