மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் பலி, 60 பேர் காயம்

மத்தியப் பிரதேச மாநிலம் ஹர்தாவிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 60 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த பயங்கர விபத்தினால் எழுந்த தீ மற்றும் புகையினால் அருகில் உள்ள இடங்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த பயங்கர விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வெடிவிபத்தின் தீவிரத்தால் அருகிலுள்ள நர்மதாபுரம் மாவட்டத்தின் சியோனி மால்வாவிலும் அதிர்வுகள் உணரப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.

இந்த கோர சம்பவம் குறித்து அதிகாரிகளுடன் பேசியுள்ள மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ், விபத்து குறித்து முழு தகவல்களையும் வழங்கும்படி கேட்டுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக துயரமான செய்தி வந்துள்ளது. அமைச்சர் உதய் பிரதாப் சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். இந்தூர் மற்றும் போபாலில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீய காய பிரிவுகள் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு கூடுதலாக தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, விபத்து குறித்து வெளியான வீடியோவில், பட்டாசு ஆலையில் இருந்து நீண்ட தீ ஜுவாலையும், புகையும் வெளியேறுவதையும், வெடிச் சத்தம் பெரிதாக கேட்டதால் அருகில் உள்ள சாலைகளில் மக்கள் பயத்துடன் ஓடுவதையும் காணமுடிந்தது.

விபத்து நடந்த ஆலைக்கு விரைந்து வந்த தீயணைப்பு வாகனங்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரிஷி கார்க் கூறுகையில், “மீட்பு பணிகள் தொடங்கியுள்ளது. நாங்கள் தேசிய பேரிடர் மீட்பு படையின் உதவியையும் நாடியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

விபத்தில் இருந்து தப்பியோடி பிழைத்து வந்த ஊழியர் ஒருவர் கூறுகையில், “வெடி விபத்து சம்பவத்தின் போது ஆலையில் 150 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர்” என்று தெரிவித்தார்.