தமிழக டிஜிபிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் கடிதம்

ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள, தமிழக டிஜிபிக்கு அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா கடிதம் எழுதியுள்ளார்.

மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தமிழக டிஜிபிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அக்கடிதத்தில், ‘ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது தெரிந்தால், அவர்களுடைய ஜாமீனை ரத்து செய்ய அரசு குற்றவியல் வழக்கரைஞரை அணுக வேண்டும். இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும். குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கும்போது நீதிமன்றங்கள் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு மீறினால் அவர்களது ஜாமீனை ரத்து செய்ய உரிய நடவடிக்கையினை மேற்கொள்ள காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும்.’

‘சமூகத்தை பாதிக்கும் கடுமையான குற்றங்களில், உரிய காலக் கெடுவிற்குள் புலன்விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். இதை தவறுவதால் குற்றவாளிகள் எளிதில் ஜாமீன் பெற வழிவகைச் செய்கிறது. அதனை தடுத்திட, கடுமையான குற்ற வழக்குகளில் தனிக்கவனம் செலுத்தி, புலன் விசாரணை செய்து, உரிய காலக் கெடுவிற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையையும் விரைந்து முடிக்க காவல்துறையினரை அறிவுறுத்த வேண்டும்.’

ஜாமீனில் வெளிவரும் குற்றவாளிகள், சாட்சிகளை கலைப்பது, மிரட்டுவது போன்ற சட்ட விதிகளுக்கு எதிரான செயல்களில் ஈடுபடும் பட்சத்தில், காவல் துறையினர் அரசு குற்றவியல் வழக்கறிஞர்களை கலந்தாலோசித்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தால் குற்றவாளிகள் தொடர் குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்க முடியும்’ என்று அந்த கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.