கன்னியாகுமரி அருகே கோயில் தெப்பக்குளத்தில் மூழ்கி அக்கா, தங்கை என இரண்டு சிறுமிகள் பலியாகினர். இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கன்னியாகுமரி அருகே பரமார்த்தலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான ராஜேஷ்குமார். இவருக்கு பிரியா (14), ஷிவாலி (12) என்ற இரண்டு மகள்கள். இவர்கள் இருவரும் கொட்டாரம் அரசு பள்ளியில், முறையே 9 மற்றும் 7-ம் வகுப்பு பயின்று வந்தனர். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் இன்று, மகாதானபுரம் பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றனர்.
அங்கு கொடுக்கப்பட்ட பிரசாதத்தை சாப்பிட்ட அவர்கள், அருகில் உள்ள தெப்பக்குளத்திற்கு கை கழுவ சென்றுள்ளனர். அப்போது அக்கா, தங்கை இருவரும் எதிர்பாராதவிதமாக தவறி குளத்தில் விழுந்ததாக தெரிகிறது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் தேடினர். ஆனால் இருவரும் இறுதியில் சடலமாக மீட்கப்பட்டனர்.
இதையடுத்து இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக கன்னியாகுமரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.