கேரளா மாநிலத்தில் வெஸ்ட் நைல் வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உகாண்டாவில் கடந்த 1937ம் ஆண்டு கண்டறியப்பட்ட வெஸ்ட் நைல் வைரஸ் அமெரிக்காவில் கடங்த 1999ம் ஆண்டு முதல் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் நோயாக தற்சமயம் இருந்து வருகிறது. கொசுக்கள் மூலமாக அதிகளவில் பரவும் இந்த நோயால், காய்ச்சல், தலைவலி, உடலில் தடிப்புகள், அரிப்பு போன்றவை ஏற்படும். பொதுவாக இதன் அறிகுறிகள் தெரிய இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு மேல் ஆகும் என்பதால், அறிகுறிகள் தெரிய துவங்கியவுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர வேண்டும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெஸ்ட் நைல் வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆலப்புழா, திருச்சூர், மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த நோய் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அனைத்து மாவட்டங்களும் விழிப்புடன் இருக்குமாறு நேற்று அரசு அறிவுறுத்தி இருந்த நிலையில் இன்று கேரள மாநிலத்தில் 5 பேர் வெஸ்ட் நைல் வைரஸ் பாதிப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும், அதேசமயம் கவனத்துடன் இருக்குமாறும் அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது. டெங்கு காய்ச்சலுக்கும், இந்த நோய்க்கும் ஒரே விதமான அறிகுறிகள் தென்படுவதற்கு வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது