அதிகரிக்கும் கோடை வெயில் காரணமாக தமிழ்நாட்டிற்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வெப்ப அலை வீச போவதாக 5 நாட்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு இயல்பை விட வெப்பம் உச்சமாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை பல அறிவுரைகளை வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த சிலநாட்களாகவே பல இடங்களில் வெயில் சதமடித்து 100 டிகிரியை கடந்துள்ளது. கோடை வெயிலின் காரணமாக சென்னையைச் சுற்றியுள்ள முக்கியமான நீர்த்தேக்கங்களில் கடந்தை ஆண்டைவிட இந்த ஆண்டு நீர் கொள்ளளவு குறைந்துள்ளது எனவும் சொல்லப்படுகிறது. இதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயமும் உள்ளது.
இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் உள்ளதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் மிகக் கடுமையான வெப்ப அலை வீசும் என்பதால் அந்த மாநிலங்களுக்கு அடுத்த 5 நாட்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.