தேர்தல் நெருங்கும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா

டெல்லி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை அர்விந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20,25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இதனிடையே, தலைநகர் டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கு அடுத்தமாதம் 25ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க. முக்கிய கட்சிகளாக உள்ளன. அதேவேளை, நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகியவை இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. ஆனால், டெல்லியில் தனித்து போட்டியிட உள்ளன.

இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைவர் அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். காங்கிரஸ் பொதுச்செயலாளர் தீபக் பதரியா, டெல்லி காங்கிரஸ் உள்விவகாரத்தில் தலையிடுவதாக கூறி அர்விந்தர் சிங் லவ்லி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தீபக் பதரியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர்களை கட்சியில் இருந்து நீக்கக்கோரி தொடர்ந்து அழுத்தம் வருவதால் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அர்விந்தர் சிங் லவ்லி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சம்பவம் அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.