தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை எப்போதும் மத்திய அரசு கொடுப்பதில்லை. அதிமுக, திமுக என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு நிதி தருவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சேலத்தில் அதிமுக சார்பில் கொங்கணாபுரம் உள்ளிட்ட 4 இடங்களில் நீர் மோர் பந்தலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களுடன் பேசியபோது, “ தமிழ்நாடு அரசு கேட்கும் நிதியை எப்போதும் மத்திய அரசு கொடுப்பதில்லை. எப்போதும் கேட்கப்படும் நிதியை விடக் குறைந்த அளவு நிதியையே மத்திய அரசு அளிக்கும்.
அதிமுக, திமுக என எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு நிதி தருவதில்லை. அதிமுக அட்சியிலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலும் நிதி குறைத்து தான் வழங்கப்பட்டது.
தற்காலிக நிவாரணமாக எஸ்டிஆர்எப் நிதியை எடுத்து எந்தெந்த நிவாரணத்துக்கு வேண்டுமோ அதற்கு செலவழிக்கலாம். நிரந்தர நிவாரணமாக என்டிஆர்எஃப் நிதியின் கீழ் விதிமுறைகளில் வந்தால் நிதி வழங்குவார்கள், இல்லாவிட்டால் வழங்கமாட்டார்கள். ஒவ்வொன்றிற்கும் ஒரு வரைமுறை வைத்துள்ளனர். என்டிஆர்எப் எவ்வளவு தொகை கொடுக்க முடியுமோ அதை மட்டும்தான் கொடுப்பார்கள்.
திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்தபோது திமுக அரசு வாதாடி பெறவில்லை. அதிமுக ஆட்சியில் இருந்தபோது எத்தனை புயல்கள் வந்தன. அப்பொழுது கேட்ட நிதியையும் மத்திய அரசு கொடுக்கவில்லை. அப்போது சேதம் அதிகம்; தற்பொழுது சேதம் குறைவு, மழை மட்டும் தான் பெய்துள்ளது. புயலால் எங்கும் மக்கள் பாதிக்கப்படவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது என்பது அதற்கு தேவையான நிதியை அரசு கேட்டு பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மத்திய அரசு முழுமையான நிதியை விடுவிக்கவில்லை. இது காலங்காலமாக உள்ளது.
குடிமராமத்து திட்டம் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டது. அதிமுக ஆட்சியில் 14 ஆயிரம் ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டன. நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தலில் அதிமுக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெறும். மேட்டூர் அணை அதிமுக ஆட்சியில் தூர்வாரட்டது. அதேபோல மேட்டூர் அணை உபரி நீர் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது. போதைப்பொருள் விவகாரத்தில் அரசு அலட்சியம் காட்டி வருகிறது” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.