உத்தராகண்ட் மாநிலம், நைனிடால் மலைவாச ஸ்தலத்தை காட்டுத் தீ அடைந்துள்ளதால், அதனை கட்டுப்படுத்த, ராணுவத்தின் உதவியை மாநில அரசு நாடியது.
உத்தராகண்ட் மாநிலம், நைனிடால் மலைப் பகுதியில் அதிகரித்த வெப்பத்தின் காரணமாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இந்த காட்டுத் தீ நேற்று இரவு நைனிடால் நகரை அடைந்தது. ஏற்கெனவே, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் காட்டுத் தீ நகர்ப்பகுதியை அடைந்துவிட்டதால், மலை நகரம் முழுவதும் புகை மூட்டமாக உள்ளது. நைனிடாலில் உள்ள உயர்நீதிமன்ற காலனியை ஒட்டிய பகுதியில் தீ பரவியுள்ளது.
இதையடுத்து அவசர நடவடிக்கையாக உத்தராகண்ட் அரசு, இந்திய ராணுவத்தின் உதவியை நாடியுள்ளது. அதன்பேரில் ஹெலிகாப்டர் மூலம், ஏரியிலிருந்து நீர் எடுத்துச் செல்லப்பட்டு, காட்டுத் தீ எரிந்து வரும் பகுதியில் ஊற்றி தீயை அணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையே நைனிடால் ஏரியில் படகு சவாரிக்கு அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
காட்டுத் தீ குறித்து உயர்நீதிமன்ற உதவிப் பதிவாளர் கூறுகையில், “தி பைன்ஸ் அருகே அமைந்துள்ள பழைய காலியான வீடு ஒன்றில் தீ பரவியுள்ளது. இது உயர் நீதிமன்ற காலனிக்கு எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. எனினும், இங்குள்ள கட்டிடங்களுக்கு அருகில் தீப்பற்றி எரிந்து வருவதால் ஆபத்தான நிலை உள்ளது” என்றார்.
இதற்கிடையே ருத்ரபிரயாக்கில் காடுகளுக்கு தீ வைக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த பகுதியின் வனத்துறை அதிகாரி அபிமன்யு கூறியுள்ளார். உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் காட்டுத் தீ சம்பவங்கள் வேகமாக அதிகரித்து, 33.34 ஹெக்டேர் வனப்பகுதி நாசமாகி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 31 புதிய காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நைனிடாலைச் சுற்றியுள்ள கிராமங்களான பல்டியாகான், ஜியோலிகோட், மங்கோலி, குர்பதால், தேவிதுரா, பவாலி, பினஸ், பிம்தால் மற்றும் முக்தேஷ்வர் உள்ளிட்ட கிராமங்களும் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுத் தீ சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.