கேரளாவில் நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு ஒரு வாக்கு அளித்தால், இரண்டு வாக்காக பதிவானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரளாவில் உள்ள மொத்தம் 20 மக்களவை தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 26-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆனி ராஜா, திருச்சூர் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் போட்டியிடுகின்றனர். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக என மூன்று அணிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.
இதையொட்டி காசர்கோடு தொகுதியில் நேற்று மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இன்பசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்குப்பதிவின் போது, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள சின்னங்களுக்கு விழும் வாக்குகள் ஆராயப்பட்டது. இந்த ஆய்வு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
அப்போது பாஜகவுக்கு ஒரு வாக்கு அளித்தால், இரண்டு வாக்குகள் பதிவாவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராஜ்மோகன் உன்னி ஆகியோர் குற்றம் சாட்டினர்.
20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அதில் 4 இயந்திரங்களில் இந்தக் கோளாறு கண்டறியப்பட்டதாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள நோட்டா உட்பட 10 பொத்தான்களையும் ஒவ்வொரு முறை அழுத்தியபோதும், விவிபாட் இயந்திரத்தில் பாஜகவுக்கு இரண்டு வாக்குகள் பதிவானதாக காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேசமயம் பாஜகவுக்கு ஒரு ஓட்டுகூட பதிவு செய்யப்படாத போதும், ஒவ்வொரு முறையும் விவிபாட் இயந்திரத்தில் ஒரு பாஜக சின்னத்திற்கான வாக்கு விழுந்ததாக காட்டியதாக வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் குற்றம் சாட்டினர்.
அந்த விவிபாட் சீட்டுகளில், ‘இது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது’ என்ற வாசகம் இருந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது இதை சுட்டிக்காட்டி பாஜக பிரச்சினை செய்யும் எனவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்தார். இரண்டு முறை தவறு நேர்ந்த போதும், மூன்றாவது முறை அவை சரி செய்யப்பட்டு அனைத்து இயந்திரங்களும் சரியான முறையில் வேலை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.