‘காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் கூட ஜெயிக்காது’ : கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களில் கூட வெற்றி கிடைக்காது என கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி, ’இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு 180 சீட்கள் கூட தேறாது’ என விமர்சித்து இருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் கர்நாடக முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான ஜெகதீஷ் ஷெட்டர் பதிலடி தந்திருக்கிறார். அதில், காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் 40 இடங்களில் கூட வெற்றி கிடைக்காது என தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவில் தனதுக்கு சீட் ஒதுக்கப்படாத கோபத்தில், காங்கிரஸ் கட்சிக்கு ஜெகதீஷ் ஷெட்டர் தாவியிருந்தார். அதன் பின்னர் மக்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்குவதாக பாஜக உறுதியளித்ததும், மீண்டும் அக்கட்சிக்கு திரும்பியிருக்கிறார். தற்போது பெலகாவி தொகுதியின் பாஜக வேட்பாளராக வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கும் ஜெகதீஷ் ஷெட்டர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

”காங்கிரஸ் கட்சி 40 சீட்களை தாண்டுமா என நான் சவால் விடுகிறேன். இதை நான் மட்டும் சொல்லவில்லை. இந்தியா கூட்டணியின் அங்கமாக இருக்கும் மேற்கு வங்கம் மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியே சொல்லியிருக்கிறார். காங்கிரஸ் கட்சிக்கு 40 சீட்கள் கூட தேறாது என அவர் பழித்திருக்கிறார். கள நிலவரமும் அதுதான். மாறாக, பாஜக 400 சீட்களுக்கு மேலாக வெல்வோம் என மக்கள் கணித்துள்ளனர்” என்று ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

பாஜக – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே தாவல் மேற்கொண்டிருக்கும் ஜெகதீஷ் ஷெட்டர், பெலகாவி தொகுதியில் தனது வெற்றி உறுதி என்றும் தெரிவித்திருக்கிறார். எந்த கட்சியில் இருந்தாலும் மக்கள் மத்தியில் தனிப்பட்ட செல்வாக்கினை கொண்டிருக்கும் குறிப்பிடத்தக்க கர்நாடகத் தலைவர்களில் ஒருவரான ஜெகதீஷ் ஷெட்டர், சட்டப்பேரவைத் தேர்தலில் தனக்கு சீட் ஒதுக்காத பாஜக, மக்களவைத் தேர்தலில் சீட் ஒதுக்கி இருப்பதில் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

28 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 ஆகிய தேதிகளில், 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.