வெப் சீரிஸ் பார்த்து ஓட்டல் உரிமையாளர் மகன் கொலை : எம்பிபிஎஸ் மாணவி உள்பட 4 பேர் கைது

வெப் சீரிஸ் பார்த்து ஓட்டல் உரிமையாளர் மகனைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் எம்பிபிஎஸ் மாணவி உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் நொய்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டாவைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் ஷர்மா. ஓட்டல் உரிமையாளர். இவரது மகன் குணால் ஷர்மா (15). இவர் கடந்த மே 1-ம் தேதி ஓட்டலில் இருந்த போது கடத்தப்பட்டார். இதுகுறித்து அவரது தந்தை, போலீஸில் புகார் கொடுத்தார். கடத்தப்பட்ட குணாலை போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில், மே 5- ம் தேதி, புலந்த்ஷாஹரில் உள்ள கால்வாயில் குணால் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக மூன்று குற்றவாளிகள் கடந்த புதன்கிழமையும், ஒருவர் நேற்றும் கைது செய்யப்பட்டனர்.

இக்கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் போலீஸார் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான பல தகவல்கள் வெளியானது. குணால் கொலை செய்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இதற்காக திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்தது.

குறிப்பாக, கொலை செய்து விட்டு கைரேகை பதியாமல் போலீஸாரிடமிருந்து எப்படி தப்பிப்பது என்பதற்காக வெப் சீரிஸ்களை அவர்கள் தொடர்ந்து பார்த்துள்ளனர். அதன்படி குணாலின் உடலில் பதிந்திருந்த கேரேகைகளை டெட்டால் கொண்டு கழுவியுள்ளனர். இதன்பின் குணால் உடலை கால்வாயில் வீசியுள்ளனர். குறிப்பாக, குற்றம் செய்த பிறகு சாட்சியங்களை அழிப்பதற்காக இந்த நான்கு பேரும் பெரும் முயற்சியில் ஈடுபட்டதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

குணால் வாயில் டேப் ஒட்டப்பட்டு ஓட்டலில் இருந்து போலி நம்பர் பிளேட் கொண்ட வாகனத்தில் கடத்தியுள்ளனர். அத்துடன் குணால் உடலை அப்புறப்படுத்த தள்ளுவண்டியையும் பயன்படுத்தியுள்ளனர். குணால் கொலைக்கு பண வியாபாரம் தான் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால், விசாரணையில், குணாலின் மாமா மனோஜ் சர்மா, குணாலின் தந்தை கிருஷ்ண குமார் சர்மாவிடம், வட்டிக்கு 23 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார்.

அந்த கடனை அடைக்க முடியாததால் மனோஜின் தாபாவை கிருஷ்ணகுமார் தன்வசம் எடுத்துக் கொண்டுள்ளார், அந்த தாபாவை நடத்த அவரது மகன் குணாலை நியமித்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரமே கொலைக்கு காரணமாக அமைந்துள்ளதாக கவுதம் புத் நகர் கூடுதல் போலீஸ் கமிஷனர் பப்லு குமார் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்,” இந்த கொலை தொடர்பாக நொய்டாவில் உள்ள தாத்ரியில் வசிக்கும் மனோஜ் சர்மா (39), புலந்த்ஷாஹரில் வசிக்கும் ஹிமான்ஷு சிங் (25), கிரேட்டர் நொய்டாவில் உள்ள கஸ்னாவில் வசிக்கும் குணால் பாடி (22), எம்பிபிஎஸ் மாணவி தன்வி ( 20) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டல் அருகே இருந்த சிசிடிவியில் பதிவான கடத்தல் காரை கண்டுபிடித்ததால் கொலையாளிகள் சிக்கினர்” என்றார். வெப் சீரிஸ் பார்த்து சிறுவனை ஒரு கும்பல் திட்டமிட்டு கொலை செய்த சம்பவம் நொய்டாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.