பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 4 பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களும், 500 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்களும் பெற்று திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி சாதனை படைத்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியான நிலையில், தமிழ்நாடு முழுவதும் 91.55 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த தேர்வுகள் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட நிலையில், மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த அரசுப்பள்ளி மாணவி சுஸ்யா தமிழில் 98, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 100, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 100 என மொத்தம் 497 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். இதே போல் 499 மதிப்பெண்கள் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காவியாஸ்ரியா என்ற மாணவி அசத்தியுள்ளார். ஒட்டன்சத்திரம் கொசவபட்டி அக்ஷயா அகாடமி மேல்நிலைப் பள்ளியில் காவியாஸ்ரியா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியிருந்தார்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 100, கணித பாடத்தில் 100, அறிவியல் பாடத்தில் 100, சமூக அறிவியல் பாடத்தில் 100 மற்றும் தமிழில் 99 மதிப்பெண்கள் என மொத்தம் 499 மதிப்பெண்களை பெற்று மாணவி காவியா சாதனை படைத்துள்ளார். அவருக்கு சக மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.