காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா மற்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஆகியோரை முன்வைத்து, பாஜக – காங்கிரஸ் இடையிலான இனவெறி சர்ச்சை அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தலைவர் சாம் பிட்ரோடாவின் பேச்சை முன்வைத்து, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜக கடுமையாக களமாடி வருகிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை சித்தரிக்கும் சாம் பிட்ரோடாவின் ஒப்புமை குறித்து பிரதமர் மோடி உள்ளிட்டோர் தாக்குதலைத் தொடங்கியதில், அது சாம் பிட்ரோடா தனது கட்சிப் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதில் முடிந்தது.
முன்னாள் பிரதமர்கள் ராஜீவ் காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரின் ஆலோசகராக விளங்கிய பிட்ரோடா, “இந்தியாவைப் போல பன்முகத்தன்மை கொண்ட நாட்டை ஒன்றாக வைத்திருக்க முடியும். கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களைப் போலவும் இருந்தாலும் நாங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள்” என்று தெரிவித்திருந்தார்.
இதனை ’முற்றிலும் இனவெறி’ என்று கடுமையாக சாடிய மோடி, தோல் நிறத்தின் அடிப்படையில் தங்களை அவமதிக்கும் முயற்சியை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்றார். இந்த விவகாரத்தில் திரவுபதி முர்முவை குடியரசுத் தலைவராக்கும் தேர்தலில், அவரைப் புறக்கணித்த காங்கிரஸ் கட்சியின் பின்னணியிலும் இனவெறி – நிறவெறி இருந்ததாக சித்தரித்தார். நேற்றைய தெலங்கானா தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மோடி இவ்வாறு சீறியதற்கு, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று பதிலடி தந்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ப.சிதம்பரம், ‘இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கான கடந்த தேர்தலில், திரவுபதி முர்மு மற்றும் யஷ்வந்த் சின்ஹா என 2 வேட்பாளர்கள் இருந்தனர். பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் முர்முவை ஆதரித்தன. காங்கிரஸ் உட்பட 17 எதிர்க்கட்சிகள் சின்ஹாவை ஆதரித்தன, வேட்பாளருக்கான ஆதரவு என்பது தோல் நிறத்தின் அடிப்படையில் இல்லை; ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது ஒரு அரசியல் முடிவு. மேலும், அந்த தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு அது தான் சார்ந்த கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டது. மாண்புமிகு பிரதமர் தோலின் நிறத்தை ஏன் தேர்தல் விவாதத்தில் கொண்டு வருகிறார்? பிரதமரின் கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை மற்றும் அப்பட்டமான இனவெறி கொண்டவை” என்று பதிலடி தந்திருக்கிறார். ப.சிதம்பரத்தின் பதிலடியை இந்தியா கூட்டணியினர் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.