“நம் நாடு காங்கிரஸ் வசம் சென்றால், இந்துக்களுக்கென ஒரு நாடே இருக்காது” என பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவுத் தலைவர் அமித் மாள்வியா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு அளித்த அறிக்கையை சுட்டிக்காட்டி இக்கருத்தை தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு பொருளாதார ஆலோசனைக் குழு அளித்த அறிக்கையில், “1950 மற்றும் 2015-க்கு இடைப்பட்ட காலத்தில் கிறிஸ்தவர்களின் மக்கள்தொகை 5.38 சதவீதம் அதிகரித்துள்ளது. சீக்கியர்களின் மக்கள் தொகை 6.58 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பொருளாதார ஆலோசனைக் குழுவின் விவரங்களை சுட்டிக்காட்டி, இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அமித் மாள்வியா, “1950 மற்றும் 2015-க்கு இடையில் இந்துக்களின் மக்கள் தொகை 7.8% குறைந்துள்ளது (84.68 சதவீதத்திலிருந்து 78.06 சதவீதமாக குறைவு). அதே வேளையில், முஸ்லிம்களின் மக்கள் தொகை 43% அதிகரித்துள்ளது (9.84 சதவீதத்திலிருந்து14.09 சதவீதமாக அதிகரிப்பு) நம் நாடு காங்கிரஸ் வசம் சென்றால், இந்துக்களுக்கென ஒரு நாடே இருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப் பிரதேசத்தின் துணை முதல்வர் கேசவ் பிரசாத மவுரியா, “இந்து மக்கள் தொகை குறைவதற்கு காங்கிரஸே காரணம். இந்துக்களின் மக்கள் தொகை குறைவதும், முஸ்லிம்களின் மக்கள்தொகை அதிகரிப்பதும் கவலைக்குரிய விஷயம்.
காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம் லீக் போல செயல்பட்டது. அதனால்தான் நாட்டில் மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகத்தான் பொது சிவில் சட்டத்தை பாஜக கோருகிறது. அப்போதுதான் நாட்டில் மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு ஏற்படாமல் இருக்கும். இல்லாவிட்டால் இங்கே இன்னொரு பாகிஸ்தானுக்கான கோரிக்கை எழும்” என்றார்.