சவுக்கு சங்கருக்கு ஒன்றரை மணி நேரம் கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனை

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

காவல்துறை அதிகாரிகள், பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், சென்னையைச் சேர்ந்த சவுக்கு என்ற யுடியூப் சேனலின் முதன்மை செயல் அதிகாரி சங்கரை கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த 4-ம் தேதி தேனியில் வைத்து கைது செய்தனர். கைது செய்த பின்னர், சங்கர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது சேலம், திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில் வழக்கு பதியப்பட்டது. மேலும், தேனியில் அவரது காரில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து கோவை மத்திய சிறையில் இருந்து சவுக்குசங்கர் நேற்று தேனி கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணைக்காக, மதுரையில் உள்ள நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர், நேற்று இரவு மீண்டும் கோவை அழைத்து வரப்பட்டு, மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார்.

இந்தச் சூழலில், அவரது வழக்கறிஞர்கள் சவுக்கு சங்கருக்கு காவலர்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டுள்ளது, அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்திருந்தனர். அதைத் தொடர்ந்து சவுக்கு சங்கருக்கு கோவை அரசு மருத்துவமனையில் வைத்து உடலில் உள்ள காயங்களை கண்டறிந்து அதற்கான சிகிச்சை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பேரில் சவுக்கு சங்கர் இன்று காலை கோவை மத்திய சிறையில் இருந்து போலீஸ் வேன் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. வலது கையில் கட்டு போட்டிருந்தார். எக்ஸ்ரே, அல்ட்ரா ஸ்கேன் உள்ளிட்டவை எடுக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டன. பின்னர், மருத்துவர் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. கிட்டத்தட்ட 11 மணியில் இருந்து 12.30 மணி வரை கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதைத் தொடர்ந்து போலீஸார் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.