ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை பாதிப்பை அடுத்து, கேரள மாநிலத்தில் விமானக் கட்டணம் கணிசமாக ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கான விமான பயணக் கட்டணம் அதிகரித்துள்ளது.
கேரளாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று வரும் விமானங்களில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின் பங்கு பிரதானமானது. அந்நிறுவனம் மட்டும் அந்த மாநிலத்தில் ஒரு வாரத்துக்கு சுமார் 275 விமான பயணங்களை கையாண்டு வருகிறது. இதன் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு கேரளாவில் இருந்து வெளிநாடு செல்வது பயணிகளுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவையில் ஏற்பட்டுள்ள இடையூறு மற்றும் பயணிகளின் எண்ணிக்கை இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. விடுமுறை காலம் மற்றும் கேரளாவில் பொதுத் தேர்தல் போன்ற காரணங்களால் சர்வதேச விமான சேவை அங்கு ஏற்கனவே டிமாண்டில் உள்ளது. இந்தச் சூழலில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விவகாரம் அதனை மேலும் கூட்டியுள்ளது.
“மிக முக்கிய விமான நெட்வொர்க்கில் சிக்கல் ஏற்பட்டால் வெளிநாட்டு விமான டிக்கெட்டுக்கான டிமாண்ட் கூடும். பயணிகள் எப்படியேனும் அங்கு செல்ல வேண்டுமென முயற்சிப்பார்கள். அதனால் டிக்கெட் விலை அதிகரிக்கும். இருந்தாலும் இது தற்காலிகமானதுதான்” என கேரள மாநில டிராவல் ஏஜெண்ட் சங்க தலைவர் கே.வி.முரளிதரன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் செல்ல பட்ஜெட் விலையில் குறைந்தபட்சமாக கிடைக்கும் விமான டிக்கெட்டின் விலை ரூ.33,592. இது இன்றைய நிலவரம். Ethihad ஏர்வேஸில் துபாய் செல்ல ரூ.63,338 ஆகிறது. கொச்சியில் இருந்து செல்வதற்கான விமான கட்டணம் ரூ.42,476 முதல் ரூ.45,817 வரை உள்ளது.