சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம் : இரு பெண்கள் புகார் வாபஸ்

சந்தேஷ்காலி சம்பவத்தில் ஒரு பெண்ணும், அவரது மாமியாரும் தங்கள் புகார்களை வாபஸ் பெற்றனர். தன்னைக் கட்டாயப்படுத்தி வெள்ளைப் பேப்பரில் கையெழுத்து பெற்று, அதில் ஏதோ எழுதிக் கொண்டனர். அதனால் புகாரை வாபஸ் பெறுவதாக அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக ஊடகங்களைச் சந்தித்த அந்த இரு பெண்களும் தாங்கள் பாலியல் வன்கொடுமை புகாரில் கையெழுத்திட நிர்பந்திக்கப்பட்டதாகத் தெரிவித்தனர். மேலும் திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு எதிரான புகாரை வாபஸ் பெற்றதால் தாங்கள் மிரட்டப்படுவதாக புதிய புகார் ஒன்றை போலீஸில் கொடுத்துள்ளனர்.

முன்னதாக, நேற்று சம்பந்தப்பட்ட பெண்ணும், அவரது மாமியாரும் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்தனர். அப்போது, “நாங்கள் எந்த ஒரு போலி புகாரிலும் தொடர்புபடுத்தப்பட விரும்பவில்லை. எங்கள் பகுதியில் அக்கம்பக்கத்தினர் யாரும் எங்களிடம் பேசுவதில்லை. நாங்கள் போலி புகாரை ரத்து செய்யுமாறு கோரினால் காவல் துறையால் விரட்டப்படுகிறோம். எங்களிடம் வெற்றுக் காகிதத்தில் கையெழுத்து வாங்கினார். பிரதம மந்திரியின் ஊரக வேலை உறுதித் திட்டத்துக்காக கையெழுத்து வாங்குவதாகக் கூறினர். ஆனால், அது திரிணமூல் தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தவே என்பது எங்களுக்குத் தெரியாது” எனத் தெரிவித்திருந்தனர்.

மக்களவைத் தேர்தல் களத்தில் சந்தேஷ்காலி பிரச்சினையை பாஜக மிகப் பெரிய பிரச்சாரத் துருப்பாகப் பயன்படுத்தி வரும் சூழலில், இரண்டு பெண்கள் தாங்கள் அளித்த பாலியல் வன்கொடுமை புகாரையே வாபஸ் பெற்றுள்ளனர். இந்நிலையில், பாஜகவின் சுவேந்து அதிகாரி மற்றும் சிலர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப் போவதாக திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. சந்தேஷ்காலி பாலியல் வன்கொடுமை புகார் முழுவதுமாக பாஜகவால் புனையப்பட்டது என்று திரிணமூல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.