20 ஆண்டு கால கனவு கைகூடும் தருணம் கோவை மேற்கு புறவழிச்சாலை திட்டத்தை விரைந்து முடிக்க அதிகாரிகள் திட்டம்

கோவையில் மேற்கு புறவழிச் சாலை திட்டத்தின் முதல் கட்ட பணியை அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க மாநில நெடுஞ்சாலைத் துறை தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

தொழில் நகரமாக விளங்கும் கோவை போக்குவரத்து நெரிசல் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்திருக்கிறது. தினந்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் சாலைகளில் வலம் வரும் நிலையில், சாலை விரிவாக்க பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென தொழில்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். குறிப்பாக, கோவையை சுற்றிலும் மேற்கு புறவழிச்சாலை மற்றும் கிழக்கு புறவழிச்சாலை ஆகிய இரண்டு சாலைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்பது பல்வேறு தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

32 கிலோ மீட்டர் நீளமுள்ள மேற்கு புறவழிச் சாலை திட்டத்திற்கான முதல் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணி ஏற்கெனவே முடிந்துவிட்ட நிலையில், இரண்டாவது கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணி 70% முடிந்துவிட்டது. மதுக்கரை முதல் மாதம்பட்டி வரையிலான 11.8 கிலோ மீட்டர் சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணிகள் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 200 கோடியில் நடைபாதையுடன் இந்த சாலை அமைக்கப்பட்டு வந்தது. மணல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் பணிகள் மந்தமடைந்தன. அது சரி செய்யப்பட்டு தற்போது பணிகள் விரைந்து முடிக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாதம்பட்டியில் இருந்து கணுவாய் வரை கிட்டத்தட்ட 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணிக்காக நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளது.

சுமார் 20 ஆண்டு காலமாக இத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டால், கோவை மாநகரின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதே போல் மாநில நெடுஞ்சாலை துறையின் கீழ் எல்என்டி சாலை அமைக்கப்பட்டுள்ளது. தொப்பூர் கணவாய்க்கு அடுத்தபடியாக இந்த சாலையில் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் மட்டும் 120-க்கும் மேற்பட்டோர் இந்த சாலையில் விபத்து ஏற்பட்டு உயிர் இழந்துள்ளனர். எனவே இதனை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும் என்பதும் வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது. இதையடுத்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு இதற்கான வரைவு திட்டத்தை அனுப்பி உள்ளது. விரைவில் இந்த திட்டமும் செயல்படுத்தப்பட்டால் அது விபத்துகளை குறைப்பதோடு, கோவை மாநகரின் புறநகர் பகுதிகளில் வளர்ச்சிக்கு உதவும் என நம்பப்படுகிறது.