பாகிஸ்தான் ‘மொழியில்’ பேசுவோரை தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்க வேண்டும் : ஏக்நாத் ஷிண்டே

இந்தியாவில் இருந்துகொண்டு பாகிஸ்தானின் மொழியில் பேசுவோர் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குமுறி உள்ளார்.

இந்தியாவின் நடப்பு மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சார மேடைகளில் அண்டை தேசமான பாகிஸ்தானை முன்வைத்தும் அரசியல் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அவற்றில் ஒன்றாக, எதிர்க்கட்சித் தலைவர்களான பரூக் அப்துல்லா, விஜய் வடேட்டிவார் மற்றும் சரண்ஜித் சிங் சன்னி ஆகியோரின் அண்மை ’பாகிஸ்தான் ஆதரவு’ தொனிக்கும் பேச்சை கண்டித்து ஏக்நாத் ஷிண்டே பதிலடி தந்துள்ளார். இந்தியாவில் வசித்தபடி பாகிஸ்தானின் மொழியில் பேசும் இவர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் ஷிண்டே வலியுறுத்தி உள்ளார்.

“இவர்கள் பாகிஸ்தான் மொழியைப் பேசுகிறார்கள். இது தேசத்துரோகம் இல்லையா? பிரதமர் மோடியின் தலைமையில் நாடு முழுவதும் பரவியிருக்கும் தேசபக்தி அலையை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அது அவர்களின் துரதிர்ஷ்டம் மட்டுமே. ஆனால் எங்கள் நாட்டிற்கு எதிராக பேசுபவர்களை அப்படியே விடக்கூடாது. தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் அவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்.

இந்தியாவில் வாழ்கிறார்கள் ஆனால் பாகிஸ்தானைப் புகழ்கிறார்கள். பாகிஸ்தான் கையில் வளையலா இருக்கிறது என்று ஃபரூக் அப்துல்லா கேட்டால், இவர்கள் யார்? பாகிஸ்தானிகளா அல்லது இந்துஸ்தானிகளா? இவர்கள் நமது சொந்தக் குடிமக்களா அல்லது தேசத் துரோகிகளா? இப்படிப்பட்டவர்களுக்கு சரியான இடம் சிறைக்கூடம்தான்” என்று ஏக்நாத் ஷிண்டே குமுறி உள்ளார்.

“அதேபோல், ஹேமந்த் கர்கரே என்ற தியாகியின் மரணம் குறித்து என்ன மாதிரி பேசுகிறார்கள்? அவரை தாக்கியது கசாப்பின் தோட்டா இல்லை என்று சொல்வது, பாகிஸ்தான் குரல் போல அல்லவா உள்ளது?” என்றும் கேட்டிருக்கிறார் ஏக்நாத் ஷிண்டே. 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலின் போது மகாராஷ்டிர பயங்கரவாத எதிர்ப்புப் படைத் தலைவராக இருந்தவர் ஹேமந்த் கர்கரே.

’26/11 தாக்குதல் சம்பவத்தின்போது இவர் பாகிஸ்தான் பயங்கரவாதி கசாப்பின் தோட்டாவால் கொல்லப்படவில்லை என்றும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரரால் கொல்லப்பட்டார்’ என்றும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான வடேட்டிவார் அண்மையில் தெரிவித்து இருந்தது சர்ச்சையானது. 26/11 தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணையில் சிறப்பு அரசு வழக்கறிஞராக இருந்த உஜ்வல் நிகாமை, பாஜகவின் மும்பை வடக்கு மத்திய தொகுதி வேட்பாளராக அறிவித்ததை தாக்கி காங்கிரஸின் வடேட்டிவார் மேற்கண்ட தாக்குதலை தொடுத்திருந்தார்.

இன்னொரு பக்கம்’ பாகிஸ்தான் மீது பாயும் இந்திய அரசியல்வாதிகளின் வறட்டு எச்சரிக்கைகளால், ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என்றும், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்’ என்றும் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவது குறித்தான பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அண்மை பேச்சுக்கு பதிலளித்த ஃபரூக் அப்துல்லா, “பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்பது என்றால் பாதுகாப்பு அமைச்சர் தாராளமாக அதை செய்யட்டும்; யார் தடுக்கப் போகிறார்கள்? ஆனால் பாகிஸ்தான் கைகளில் வளையல் இல்லை; அவர்கள் கையிலும் அணுகுண்டு உள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவர்கள் பேச்சால் அணுகுண்டு எங்கள் மீது விழும்” என்று கவலை தெரிவித்திருந்தார்.

இதே போன்று பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின், ’பூஞ்ச் பயங்கரவாத தாக்குதல் என்பது பாஜகவின் தேர்தல் ஸ்டண்ட்’ என்று கருத்து தெரிவித்திருந்ததையும், ஏக்நாத் ஷிண்டே கடுமையாக சாடியிருந்தார்.