உடல்குறைப்பு அறுவை சிகிச்சையின்போது புதுச்சேரி இளைஞர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி வானவில் நகரைச் சேர்ந்தவர் துரை செல்வம். புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றத்தின் பொருளாளர். இவரது மகன் ஹேமச்சந்திரன், பிஎஸ்சி முடித்து விட்டு டிசைனிங் பணியில் இருந்தார். உடல் பருமன் காரணமாக சென்னை பம்மலில் உள்ள டி.பி.ஜெயின் மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த ஏப்.23ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை செய்யமுடிவு எடுக்கப்பட்டது. அறுவை சிகிச்சை தொடங்கிய 10 நிமிடங்களில் ஹேமச்சந்திரன் இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். அவர் கார்டியாக் அரெஸ்ட் காரணமாக இறந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
தவறான சிகிச்சை தந்ததால் இளைஞர் இறந்து விட்டதாக அவரது குடும்பத்தினர் பம்மல் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடல்நல ஆரோக்கியத்துடன் இருந்த அவருக்கு அறுவை சிகிச்சையின்போது மயக்க மருந்து கொடுத்ததில் பிரச்சினை உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர். இந்த விவகாரம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
அதில், மருத்துவனையில் உடல்குறைப்பு தொடர்பான சிகிச்சைக்கு போதிய வசதிகள் இல்லை என்பதும், மருத்துவமனையில் போதுமான டெக்னீசியன்கள் இல்லை என்பதும் உறுதியானது. மேலும், அறுவை சிகிச்சைக்கு முன்பு பெற்றோர்களிடம் உரிய தகவலை தெரிவித்து மருத்துவமனை நிர்வாகம் கையெழுத்து பெறவில்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட தாம்பரம் டி.பி.ஜெயின் மருத்துவமனையை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.