தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது : புதிய கேமராக்கள் பொருத்தம்

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது ஆகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மொத்தம் 210 கேரமாக்கள் பொருத்தப்பட்டுள்ளன. காற்றுடன் பெய்த மழை எதிரொலியாக 210 கேமராக்களில் 2 கேமராக்கள் பழுதாயின. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் பழுதான கேமராக்கள் அகற்றப்பட்டு புதிதாக 2 கேமராக்கள் பொருத்தப்பட்டன. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ராணிமேரி மகளிர் கல்லூரி, நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

அங்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 2 சிசிடிவி கேமராக்களில் பழுது ஏற்பட்டுள்ளன. மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 கேமராக்கள் பழுதாகியுள்ளன. இதையடுத்து அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு, அவற்றை பணியாளர்களை கொண்டு சீரமைக்கும் நடவடிக்கையை முன்னெடுத்தனர். சுமார் 20 நிமிடங்களுக்கு பிறகு சீரமைப்பு பணிகள் முழுமைப்பெற்று, தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதையடுத்து சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் இயங்கின. இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.