கடத்தல் விவகாரத்தில் அதிரடி திருப்பம் போலீஸுக்கு போக்குக் காட்டி தப்பிய கஞ்சா கடத்தல் மன்னன்

திருச்சியில் தங்கும் விடுதி ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளான நபர், போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய நிலையில் அவர் பிரபல கஞ்சா கடத்தல் மன்னன் என தெரிய வந்துள்ளது.

திருச்சி திருவானைக்காவல் டிரங் ரோடு பகுதியில் ஸ்ரீ என்ற தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. நேற்று அந்த விடுதியில் இருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்த ஒருவர், அங்கு ஐந்து பேர் அறை எடுத்து தங்கி இருந்ததாகவும், அவர்களுக்குள் அடிதடி ஏற்பட்டு வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸார் அந்த தங்கும் விடுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது போலீஸை கண்டதும் மூன்று பேர் தப்பி ஓடி உள்ளனர். எஞ்சி இருந்த 3 பேரில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால் அவரை மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டு காவல் நிலையத்துக்கு வருமாறு போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர்.

எஞ்சிய 2 பேரை அங்கிருந்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக தகவல்களை கூறியுள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸார் காயமடைந்தவரை தேடி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். ஆனால் அந்த நபர் அங்கிருந்து மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், பிடிபட்ட இருவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தது. பிடிபட்ட இருவர், தென்காசி பகுதியைச் சேர்ந்த கவிராஜா மற்றும் கேரளாவை சேர்ந்த அஞ்சால் என்பது தெரியவந்தது. தப்பியோடிய மூவரது பெயர்கள் ஸ்ரீவத், சரத் மற்றும் திருச்சி துறையூரை சேர்ந்த ஷாம் சுந்தர் என்பது தெரியவந்தது. மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு தப்பியோடிய நபரின் பெயர் ஷாஜி மோன் (58) என்பதும், அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கஞ்சா கடத்தல் மன்னன் என்பதும் தெரிய வந்தது.

ஷியாம் சுந்தர் தலைமையில் இந்த 5 பேரும் ஷாஜி மோனை கடத்தி வந்து, இருப்பிடத்தை காவல்துறையிடம் தெரிவித்து விடுவோம் எனக்கூறி அவரை அடித்து மிரட்டி உள்ளனர். 10 கோடி ரூபாய் பணம் கொடுத்தால் அவரை விடுவிப்பதாகவும் அவர்கள் பேரம் பேசி உள்ளனர்.

தன்னிடம் பணம் இல்லை என ஷாஜி மோன் கூறிக் கொண்டிருந்தபோது, திடீரென போலீஸார் வந்ததால் கடத்தல் முயற்சி தோல்வியில் முடிந்தது தெரியவந்தது. இதையடுத்து, தப்பியோடிய ஷாஜி மோன் மற்றும் ஷாம் சுந்தர், ஸ்ரீவத், சரத் ஆகியோரை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். போலீஸரின் பிடியிலிருந்து கஞ்சா கடத்தல் மன்னன் தப்பி ஓடி உள்ள சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.