கைகளை இழந்த போதும் ஜனநாயக கடமையாற்றிய மாற்றுத்திறனாளி கால் விரலில் மை வைத்த அதிகாரிகள்

குஜராத்தில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தலில் இரு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி தனது கால் விரல்களால் வாக்களித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நாடு முழுவதும் 10 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் உள்ள 94 மக்களவைத் தொகுதிகளில் 3-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில் மொத்தம் உள்ள 26 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வாக்களித்துள்ளனர். இங்குள்ள கேதா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட நந்தியாட் பகுதியில் காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இங்குள்ள வாக்குச்சாவடி மையம் ஒன்றில் அங்கித் சோனி என்ற வாக்காளர் இன்று தனது வாக்கை செலுத்தினார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரம் தாக்கியதில் இவர் இரண்டு கைகளையும் இழந்தார். அதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் உதவியால், கால்களின் மூலம் தனது அன்றாட பணிகளை மேற்கொள்ள அவர் பழகி இருந்தார். இடது காலில் 4 விரல்களை இழந்த போதும், எஞ்சிய ஒரே ஒரு கட்டை விரலால் தனது அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.வ தனக்கு இத்தனை சிரமம் இருந்தாலும் ஒவ்வொரு தேர்தலின் போதும் அவர் வாக்களிப்பதை கட்டாயமாக வைத்திருக்கிறார். தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதற்காக இன்று வருகை தந்த அவருக்கு, இடது கால் பெருவிரலில் அடையாள மையை தேர்தல் அலுவலர்கள் வைத்தனர். இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது கால் விரல் மூலம் அவர் தனது வாக்கை செலுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அவர், ”20 வருடங்களாக கையில்லாமல் வாழ்ந்து வருகிறேன். ஆசிரியர்கள் மற்றும் பயிற்ச்சியாளர்களின் ஆலோசனையினால் என்னால் இதை சாத்தியப்படுத்த முடிந்திருக்கிறது. நான் மக்களிடம் வைக்கும் கோரிக்கை ஒன்றுதான். அனைவரும் வாக்களிக்க வெளியில் வர வேண்டும். உங்களது ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற வேண்டும்” என்றார்.

அங்கித் சோனியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.